

டேவிட் வார்னரின் டிக் டாக்குக்கு ரசிகையாய் மாறி பாராட்டு தெரிவித்துள்ளார் டிடி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஹர்பஜன் சிங் ஏலத்தில் எடுக்கப்பட்டதிலிருந்து அவருக்கு சமூக வலைதளத்தில் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள். அதற்குக் காரணம் அவ்வப்போது தமிழ்ப் படங்களின் பிரபலமான வசனங்கள் மூலம் அவர் வெளியிடும் ட்வீட்கள்தான்.
அதேபோல் இப்போது டிக் டாக் உலகில் அனைவரையும் கவர்ந்து வருகிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த டேவிட் வார்னர். அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் கொள்ளை கொண்ட இவர், தற்போது தனது குடும்பத்தினருடன் செய்யும் டிக் டாக் வீடியோக்கள் பெரும் வைரலாகி வருகின்றன.
‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தின் பாடல்களுக்கு டேவிட் வார்னர் தனது குடும்பத்தினருடன் செய்த டிக் டாக் வீடியோக்களுக்கு அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்திருந்தார்.
தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான டிடி, டேவிட் வார்னரின் டிக் டாக் வீடியோக்கள் குறித்து தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
"சார் நீங்களும் உங்கள் குடும்பமும் அற்புதம். உங்கள் கிரிக்கெட்டுக்கு ரசிகராக இருப்பதா அல்லது நடனத்துக்கு ரசிகராக இருப்பதா என்று இப்போது தெரியவில்லை. அட்டகாசம்".
இவ்வாறு டிடி தெரிவித்துள்ளார்.