

சென்னையில் உள்ள கூவம் நதியை சுத்தம் செய்ய, 'மய்யம்' பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பார்த்திபன் யோசனை தெரிவித்தார்.
ஆதித்யா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'மய்யம்'. நவீன் சஞ்சய், ஜெய் குகேனி, சுஹாசினி குமரன் உள்ளிட்ட பல்வேறு இளைஞர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி ஸ்ரீதர் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பார்த்திபன், இயக்குநர் ஜெய் மற்றும் மறைந்த இயக்குநர் பாலசந்தரின் உதவியாளர் மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
பத்திரிகையாளர் சந்திப்பில் 'மய்யம்' படத்தைப் பற்றி பேசிவிட்டு இயக்குநர் பார்த்திபன் "நான் சில மாதங்களுக்கு முன் சென்னையில் இருந்து 25 கி.மீ தூரம் உள்ள மரக்காணம் அருகே உள்ள கிராமத்துக்கு குடிபெயர்ந்து விட்டேன். அங்குள்ள பசுமையான சூழ்நிலையில் வசிக்கிறேன். அந்த இடத்தில் செடி, மரங்களை நட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். மரங்கள் வளர உரம் தேவைப்படுகிறது. அங்கே மனித மற்றும் விலங்கு கழிவுகள், குப்பைகளைக் கொண்டு உரம் தயாரித்து பயன்படுத்துகிறார்கள்.
என் வீட்டுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது கூவம் ஆற்றில் உள்ள கழிவுகளை பயன்படுத்தினால் என்ன என்று தோன்றியது. இதுபற்றி சிலரிடம் விசாரித்தேன். கூவத்தில் உள்ள கழிவுகளை தாராளமாக பயன்படுத்தலாம் என்றார்கள். கூவத்தில் உள்ள கழிவுகளை உரமாக பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த நான் திட்டமிட்டுள்ளேன். நான் மட்டும் இல்லாமல், இயற்கை உரம் தேவைப்படுகிற மற்றவர்களும் இந்தமுறையை பின்பற்ற வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
இந்த திட்டத்தை நாம் செய்தால், கூவத்தின் கழிவுகளும் குறையும், இயற்கை உரத்துக்கும் பயன்படும். மழைவளம் பெருகி தண்ணீர் பஞ்சமும் குறைய வாய்ப்பு இருக்கிறது." என்று தெரிவித்தார் பார்த்திபன்.