

நான் அரசியலுக்கு வர பயந்தவன் அல்ல என்று இலங்கை அகதிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விஷால் தெரிவித்தார்.
நடிகர் விஷால் தனது பிறந்த நாளை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார். சென்னை எழும்பூரில் இலங்கை அகதிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார்.
அவ்விழாவில் நடிகர் விஷால் பேசியது, "இலங்கை தமிழ் மக்களுக்கு நான் உதவிகள் செய்வது அரசியல் நோக்கத்திற்காக அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். 'தாமிரபரணி' படத்துக்காக இலங்கை அகதிகள் முகாமில் படப்பிடிப்பு நடைபெற்றதில் இருந்து, நான் நீண்ட நாட்களாக அகதிகளுடன் நட்பில் தான் உள்ளேன். அப்போதிலிருந்து என்னால் ஆன உதவிகளை செய்து வருகிறேன்.
நான் அரசியலுக்கு வருவது குறித்து பயப்படவில்லை. தற்போதைக்கு அரசியல் வேண்டாம் என்று தான் நினைக்கிறேன். நான் ஒரு நடிகன், மக்களை மகிழ்விக்கும் மகத்தான பொறுப்பு எனக்கு உள்ளது. இப்போதைக்கு சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் ஒரு டிராபிக் போலீஸாக இருக்கவே விரும்புகிறேன். எங்கு நல்லது செய்ய வேண்டும் என்று என்னிடம் வந்து கேட்டால், இங்கு செய்யுங்கள் என்று கூறும் ஒரு டிராபிக் போலீஸாக இருக்க பிடித்திருக்கிறது. அப்படித் தான் இருந்து வருகிறேன்.
சமுதாயத்தில் இருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் நல்ல கல்வியறிவு வேண்டும் என்ற அப்துல் கலாமின் கனவை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறேன். அடுத்தகட்டமாக, பள்ளிகளுக்கு கழிப்பறை கட்டிக்கொடுக்க திட்டமிட்டு இருக்கிறேன். இது நடிகர் கார்த்தி சொன்ன யோசனை தான். இந்த திட்டத்தை என்னால் மட்டுமே செய்துவிட முடியாது. என் நண்பர்களுடன் இணைந்து இத்திட்டத்தை எனது அம்மாவின் அறக்கட்டளையின் பேரில் செய்ய திட்டமிட்டு இருக்கிறேன்.
இன்னும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன். இப்போதைக்கு நல்ல படங்கள், சமுதாயத்தின் நல்வழிக்கு உதவுவது என இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது.
பலரும் என்னிடம் நடிகர் சங்கத் தேர்தலில் நீங்கள் தான் தலைவர் வேட்பாளரா எனக் கேட்கிறார்கள். அத்தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசர் சார் தான் போட்டியிட உள்ளார்." என்று தெரிவித்தார் விஷால்