

உடற்பயிற்சியின்போது காயம் ஏற்பட்டதால் அருண் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்பும் இதுவரை தொடங்கப்படவில்லை. திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்துகொண்டு சமூக வலைதளம் மூலமாக கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
மேலும் உடற்பயிற்சிக் கூடங்கள் எதுவும் திறக்காததால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பான புகைப்படங்களை பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர். 'பாக்ஸர்' படத்துக்காக உடலமைப்பை மாற்றியதிலிருந்தே தீவிரமாக உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் அருண் விஜய். கரோனா ஊரடங்கிலும் வீட்டின் மொட்டைமாடி மற்றும் அறையில் செய்யும் உடற்பயிற்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு உடற்பயிற்சி செய்யும்போது, தனக்கு ஏற்பட்ட காயம் தொடர்பான பதிவொன்றை வீடியோவுடன் வெளியிட்டுள்ளார் அருண் விஜய். அதில் அவர் உடற்பயிற்சி செய்யும்போது கீழே விழுந்துவிடுகிறார். சிறு காயங்களுடன் தப்பியுள்ளார். அந்த வீடியோவுடன் அருண் விஜய் கூறியிருப்பதாவது:
"இதை எப்போதும் செய்யாதீர்கள்... உடற்பயிற்சிக்கு முன்பாக உங்கள் இயந்திரங்களைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். இது விழுந்ததால் என்னுடைய இரண்டு முட்டிகளும் ஒரு வாரம் முழுக்க வீங்கியிருந்தன. என் தலையில் அடிபடாமல் இருந்ததற்குக் கடவுளுக்கு நன்றி. இதுவொரு பாடம். பயிற்சியாளரின் மேற்பார்வை இல்லாமல் எப்போதும் உடற்பயிற்சி செய்யாதீர்கள்".
இவ்வாறு அருண் விஜய் தெரிவித்துள்ளார்.