

கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோட்டை மாற்றியதற்கு, அதிகாரிகளைப் பாராட்டியுள்ளார் கார்த்தி
தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்னைக்கு மிக அருகில் உள்ள மாவட்டங்களைத் தவிர்த்து இதர மாவட்டங்கள் ஒவ்வொன்றாக கரோனா தொற்றில்லாமல் மாறி வருகிறது.
அவ்வாறு கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவானது ஈரோடு. இதற்காக பணிபுரிந்த ஐபிஎஸ் அதிகாரிகளைப் பாராட்டி ஐபிஎஸ் சங்கத்தின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் "தமிழகத்தின் ஹாட்ஸ்பாட்டாக இருந்த ஈரோடு மாவட்டம், ஆட்சியர் சி.கதிரவன் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.சக்தி கணேசன் ஐபிஎல் ஆகியோரின் தலைமையில் புதிய தொற்று இல்லாமல் 28 நாட்களைக் கடந்து, பச்சை மண்டலமாக மாறியுள்ளது. ஈரோடு அணியினருக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்தது.
ஐபிஎஸ் சங்கத்தின் பதிவைக் குறிப்பிட்டு கார்த்தி தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
"சிகப்பு மண்டலமாக இருந்து பச்சை மண்டலமாக மாறிய முதல் மாவட்டம் ஈரோடுதான். புதிதாகத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்றி 32 நாட்கள். அதிகாரிகள், காவல்துறையினர், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என இதைச் சாதித்த அனைவருக்கும் பெரிய வணக்கங்கள்"
இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.