'கேளடி கண்மணி' முதல் நாள் படப்பிடிப்பில் நடந்த சுவாரசியம்: இயக்குநர் வஸந்த் பகிர்வு

'கேளடி கண்மணி' முதல் நாள் படப்பிடிப்பில் நடந்த சுவாரசியம்: இயக்குநர் வஸந்த் பகிர்வு
Updated on
1 min read

'கேளடி கண்மணி' முதல் நாள் படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து இயக்குநர் வஸந்த் பகிர்ந்துள்ளார்.

1990-ம் ஆண்டு வஸந்த் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'கேளடி கண்மணி'. எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ராதிகா, ரமேஷ் அரவிந்த், அஞ்சு உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். வஸந்த் இயக்குநரான அறிமுகமான படம் இதுதான். முதல் படத்திலேயே தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருதை வென்றார்

இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார் இயக்குநர் வஸந்த். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"அப்போதெல்லாம் ஒரு படத்தின் முதல் காட்சியோ அல்லது படப்பிடிப்பின் முதல் நாள் காட்சியோ எடுத்தால் அது ஏதாவது ஒரு நல்ல நேர்மறையான விஷயத்தை வசனமாகப் பேசுவதாக இருக்கும். இதை சென்டிமென்டாக வைத்திருந்தார்கள். "எல்லாரும் நல்லா இருக்கணும், இந்தப் பையன் நூற்றுக்கு நூறு வாங்கிட்டான்" இப்படி ஏதாவது ஒரு வசனம் இருக்கும். அதை நான் என் படத்தில் செய்யக்கூடாது என்று நினைத்தேன்.

அப்படி 'கேளடி கண்மணி' படத்தின் படப்பிடிப்புக்கான இடங்களைத் தேடும்போது முதலில் எங்களுக்கு ஒரு பழைய வீடு கிடைத்தது. நான் பெரிதாக எந்தத் திட்டமும் போடவில்லை. அந்த வீடு இரண்டு நாள்தான் படப்பிடிப்புக்குக் கிடைக்கும் என்றார்கள். உடனே அதுதான் ராதிகா கதாபாத்திரத்தின் வீடு என்று முடிவு செய்துவிட்டேன். முதலில் அங்குதான் படப்பிடிப்பு ஆரம்பமானது. நான் எடுத்த முதல் காட்சியே ராதிகாவின் அப்பா, அம்மா கதாபாத்திரங்கள் இறப்பதும், அதைக் கண்டு அவர் அழுவதும்தான்.

எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதென்றாலும் இதில் நான் சென்டிமென்ட் பார்க்கவில்லை. அந்தக் காட்சியை எடுக்கும் முன், எனக்கு 45 நிமிடங்கள் அவகாசம் கொடுங்கள் என்று ராதிகா சொன்னார். அங்கு ஒரு அறையில் பூட்டிக் கொண்டு தனியாக இருந்தார். 45 நிமிடங்கள் கழித்து வெளியே வந்த அவர் ஒரே டேக்கில் அதை நடித்து முடித்தார். அவ்வளவு அற்புதமான நடிகை. அது ஒரு நீளமான காட்சி. நடிகர்களுக்கும் கடினமான காட்சி, அதை எடுப்பது இயக்குநருக்கும் கடினம்".

இவ்வாறு இயக்குநர் வஸந்த் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in