விரைவில் ‘யாமிருக்க பயமே - 2’: தயாரிப்பாளர் தகவல்

விரைவில் ‘யாமிருக்க பயமே - 2’: தயாரிப்பாளர் தகவல்
Updated on
1 min read

கிருஷ்ணா, கருணாகரன், ரூபா மஞ்சரி, ஓவியா நடிப்பில் வெளியான படம் ‘யாமிருக்க பயமே’. புதுமுக இயக்குநரான டீகே இயக்கிய இப்படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் தயாரித்தது. ஹாரர் காமெடி வகையைச் சேர்ந்த இப்படம் வசூல ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படம் வெளியாகி இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிப்பது குறித்த அறிவிப்பை ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கூறியுள்ளதாவது:

"எங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு மைல்கல்லாக அமைந்த 'யாமிருக்க பயமே' படத்தின் உருவாக்கத்தில் பங்கு பெற்ற நட்சத்திரங்கள் கிருஷ்ணா, ஓவியா, ரூபா மஞ்சரி, கருணாகரன், ஆதவ் கண்ணதாசன் மற்றும் மயில்சாமி சார் ஆகியோருக்கும் படக்குழுவைச் சேர்ந்த இதர தொழில்நுட்பக் குழுவினருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.

எங்களது முந்தைய தயாரிப்புகளான 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'கோ' ஆகிய படங்கள் நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களைக் கொண்ட மதிப்பு மிகு பெரிய பட்ஜெட் படங்கள் என்றாலும், தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பார்கள் என்பதை எங்களுக்கு உணர்த்திய படம் 'யாமிருக்க பயமே'.

ரசிகர்கள் பெரிய பட்ஜெட் படமா அல்லது சிறிய பட்ஜெட் படமா என்றெல்லாம் பார்ப்பதில்லை. படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்று மட்டுமே பார்க்கிறார்கள். இப்போது மிகுந்த நம்பிக்கையுடன் 'யாமிருக்க பயமே' இரண்டாம் பாகத்துக்கான் ஆரம்பக்கட்டப் பணிகளில் இறங்கியிருக்கிறோம். விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வரும்''.

இவ்வாறு எல்ரெட் குமார் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in