விஜய் படம் கிடைத்ததில் மகிழ்ச்சி: தமன்

விஜய் படம் கிடைத்ததில் மகிழ்ச்சி: தமன்
Updated on
1 min read

விஜய் படம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருப்பதாக தமன் தெரிவித்துள்ளார்.

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இதனை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கரோனா அச்சுறுத்தல் இல்லையென்றால், இந்நேரம் முழுவீச்சில் படப்பிடிப்பில் இருந்திருப்பார்கள். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கில் 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றதால் இந்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

விஜய் படத்துக்கு முதன்முறையாக இசையமைக்கவுள்ளார் தமன். இது தொடர்பாக எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும், தொலைக்காட்சி பேட்டியொன்றில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்தப் பேட்டியில், "விஜய்யின் அடுத்த படத்துக்கு நீங்கள் இசையமைக்கப்போகிறீர்கள் என்று தெரிகிறதே?" என்ற கேள்விக்கு தமன் பதில் அளிக்கையில், "ஆம். மிகவும் ஆர்வத்துடன் அந்தப் படத்தை எதிர்நோக்கியிருக்கிறேன். மூன்று வருடங்களாகப் பேசி வருகிறோம். இப்போதுதான் எல்லாம் கைகூடி வந்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in