

‘கோச்சடையான்’ திரைப்படத்தைப் பார்க்க செல்லும் பொதுமக்களிடம் கேளிக்கை வரி வசூலிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை எர்ணாவூரைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.முத்தையா பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
தமிழில் பெயரிடப்பட்ட, தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை வளர்க்கும் நோக்கில் தயாரிக் கப்பட்ட, ‘யு’ சான்றிதழ் பெறும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு தமிழக அரசு ஓர் அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையை எதிர்த்து நான் சென்னை உயர் நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்தேன். யாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் என்பது பொதுமக்கள் நலனுக்காகக் கொண்டு வரப்பட்டது. ஆகவே, இந்த சட்டத்தின் கீழ் வசூலிக்கப் படும் வரியின் பலன்கள் பொதுமக் களுக்கே சென்று சேர வேண்டும் என்பதே எனது நோக்கம்.
அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், கேளிக்கை வரி விலக்கு அளிக்க வகை செய்யும் அரசாணையை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்து கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி உத்தரவிட்டனர்.
இந்த தடை உத்தரவின் காரண மாக ‘தெனாலிராமன்’ போன்ற திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். எனினும் இப்போது ‘கோச்சடையான்’ திரைப் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்துள்ளனர். ஆகவே, வரி விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப் பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோரைக் கொண்ட உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வில் வியாழக்கிழமை விசார ணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
தற்போது கோச்சடையான் படத் துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அந்தப் படத்தை பார்க்கச் செல்லும் பொதுமக்களிடம் கேளிக்கை வரிக் கட்டணத்தை செலுத்துமாறு திரையரங்க உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தவோ அல்லது வசூலிக்கவோ கூடாது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்.
திரையரங்க உரிமையாளர் களை எதிர் மனுதாரர்களாக சேர்ப்ப தற்காக மனு தாக்கல் செய்ய இந்த வழக்கின் மனுதாரருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதே விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுவுடன் சேர்த்து இந்த மனுவும் விசாரிக்கப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.