மது யாருடைய அத்தியாவசிய தேவை? - டாஸ்மாக் திறப்பு தொடர்பாக கமல் காட்டம்

மது யாருடைய அத்தியாவசிய தேவை? - டாஸ்மாக் திறப்பு தொடர்பாக கமல் காட்டம்
Updated on
1 min read

டாஸ்மாக் திறப்பு அறிவிப்பு தொடர்பாக தமிழக அரசை கடுமையாகச் சாடியுள்ளார் கமல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா அச்சுறுத்தல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே நாளை (மே 7) டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது தமிழக அரசு.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். டாஸ்மாக் திறப்பு அறிவிப்பு தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளோடு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், எதன் அடிப்படையில் மதுக்கடைகளை திறப்பதற்கு அரசு முடிவு செய்கிறது?

மது யாருடைய அத்தியாவசிய தேவை?

அந்த வருமானத்தை நம்பி இருக்கும் அரசுக்கா? அல்லது தங்கள் சாராய ஆலைகளின் விற்பனை குறைந்ததை குறித்து கவலையில் இருக்கும் ஆண்ட, ஆளும் கட்சியினருக்கா?

40 நாட்களாகத் தொழில் இல்லாமல், வருமானமின்றி தவிக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துங்கள் என்ற பலரது கோரிக்கைகளைக் கேட்கும் திறன் இல்லாத அரசுக்கும், இந்த வியாபாரத்தால் கொள்ளை லாபம் அடிப்பவர்களுக்கும் மட்டுமே மதுக்கடைகளைத் திறக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தெரிந்திருக்கக்கூடும்.

அண்டை மாநிலங்களில் விற்பனை உள்ளது என்பது பதிலாக இருந்தால், அவர்கள் பரிசோதிக்கும் வேகம், எளிய மக்களுக்கு அரசின் உதவிகள் சென்றடைய அரசின் திட்டம் மற்றும் நடவடிக்கைகள் என்று பல காரணிகள் உள்ளது.

படிப்படியாக மதுவிலக்கு என்று சத்தியம் செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய அரசு இது.

எவரின் வழிகாட்டுதலின்படி இந்த ஆட்சி நடக்கிறது என்று சொல்லப்படுகிறதோ அவர் 500 மதுக்கடைகளை மூடி தனது 3-வது பதவிக்காலத்தைத் தொடங்கினார் என்பதை நினைவில் கொண்டு செயல்பட வலியுறுத்துகிறது மக்கள் நீதி மய்யம்"

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in