ஒப்புக்கொண்ட சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துக் கொண்ட விஜய் ஆண்டனி

ஒப்புக்கொண்ட சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துக் கொண்ட விஜய் ஆண்டனி
Updated on
1 min read

கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் திரைத்துறையில் பணிபுரியும் தினக்கூலித் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்துக்காக லாரன்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி தற்போது பெப்ஸி சிவா தயாரிப்பில் ‘தமிழரசன்’ என்ற படத்திலும் அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘அக்னிச் சிறகுகள்’ என்ற படத்திலும், ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘காக்கி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டு வெளியாகும் திட்டத்தில் எடுக்கப்பட்டு வந்தன.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் இயல்பு நிலை திரும்பி மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்ற நிலையில் விஜய் ஆண்டனி தாமாகவே முன்வந்து தான் ஒப்புக்கொண்ட சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனியின் இந்த அறிவிப்பு குறித்து அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத் தயாரிப்பாளர் டி.சிவா கூறியுள்ளதாவது:

''கரோனா ஊரடங்கு காரணமாக தவித்து வரும் தமிழ்த் திரைப்படப் தயாரிப்பாளர்களுக்கு இப்படி ஒரு முன்னணி நடிகர் தாமாகவே முன்வந்து தன் சம்பளத்தை குறைத்துக்கொண்டது அனைவரும் பாராட்ட வேண்டிய, தமிழ் சினிமாவுக்கு முன்னுதாரணமாக இருக்கப் போகும், ஒரு நடவடிக்கை.

அவரைப் போலவே அனைத்து நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களின் சம்பளத்தில் ஒரு பகுதியையே தாமாகவே முன்வந்து விட்டுக் கொடுத்து அனைத்துத் தயாரிப்பாளர்களையும் இந்த இக்கட்டான நேரத்தில் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அப்படிச் செய்தால்தான், தற்போது வெளியாகக் காத்திருக்கும் படங்களும், முடிக்கவிருக்கும் படங்களும் எந்த நிதிச் சிக்கலும் இல்லாமல் வெளியாகும். இப்படி ஒரு முன்னுதாரணமான செயலைச் செய்து தயாரிப்பாளர்களுக்கு உதவும் விஜய் ஆண்டனியை மனதாரப் பாராட்டுகிறேன். அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன்''.

இவ்வாறு டி.சிவா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in