

தனக்காக டூப் போட்டவர்களின் பின்னணி மற்றும் படக்காட்சிகள் குறித்து கமல் தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலைப் பேட்டியாகக் கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 2-ம் தேதி நடைபெற்றது.
இந்த நேரலைப் பேட்டியில், தனது படங்களில் தனக்காக டூப் போடுபவர்களின் பின்னணி குறித்துப் பகிர்ந்து கொண்டார் கமல்ஹாசன்.
அந்தப் பகுதி:
கேள்வி: 'விருமாண்டி' படத்தில் காருக்குக் கீழே தொங்கும் காட்சியை எப்படி அடிபடாமல் படமாக்கினீர்கள்?
கமல்: சிறிய அளவு அடிபட்டது. ஆனால் விக்ரம் தர்மா என்கிற என் சகோதரன் என்னைப் பார்த்துக் கொண்டார். உயிர் காப்பான் தோழன் என்பது போல ஒரு தோழர் அவர். ஒரு காலத்தில் எனக்குப் பதிலாகச் சண்டைக் காட்சிகளில் டூப்பாக நடித்தவர்.
முன்பெல்லாம் எல்லாக் காட்சியையும் நானே நடிக்க வேண்டும் என்று நடித்து 'கல்யாணராமன்' படத்தில் ஒரு குதிரை ஓட்டும் காட்சியில் குதிரையோடு கீழே விழுந்து கால் எலும்பு பல இடங்களில் முறிந்துவிட்டது. வழக்கமாக மணி என்பவர் தான் டூப் சண்டைக்காட்சிகளில் நடித்து வந்தார். ஆனால் அது வண்ணப்படம் என்பதால் எனது நிறத்துக்கு அவர் சரியான மாற்றாக இல்லை.
அப்போதுதான் என் நிறத்தை ஒத்த ஒருவர் வேண்டுமென்று, நம்பியார் மாஸ்டரின் (சண்டைப் பயிற்சி இயக்குநர்) மகன் விக்ரம் தர்மாவைத் தேர்ந்தெடுத்தார்கள். அப்போது அவரது பெயர் தர்மசீலன். நான் செய்ய வேண்டிய அபாயகரமான சண்டைக் காட்சிகளை அவர் தான் செய்து அடிபட்டுக் கொண்டார். அன்றிலிருந்தே நாங்கள் இருவரும் இணைந்து சண்டைக் காட்சிகளைத் திட்டம்போட்டுச் செயல்படுத்துவோம்.
'விருமாண்டி' படத்தில் அந்தக் காட்சியைப் படம்பிடிக்கும்போது, என் முதுகில் பேட் (pad) வைத்துக் கொள்ளச் சொன்னார். முதலில் வேண்டாம், அளவெடுத்துவிட்டோம், அடிபடாது என்று சொன்னேன். அவர் வேண்டாம் சார், போட்டுக் கொள்ளுங்கள் என்றார். சரி என்று போட்டுக்கொண்டேன். அவர் நினைத்தது போல முதுகு தரையில் தேய்ந்தது.
ஏனென்றால் ஓடும் வண்டியை வைத்து நாங்கள் கணக்கிட்டிருக்கவில்லை. எனவே வண்டி குலுங்கும்போது ஒரு அழுத்து அழுத்தி எடுத்தது. எனக்குக் கண்கள் பிதுங்கிவிட்டன. அன்னைக்கு நான் விக்ரம் தர்மா சொன்னதைக் கேட்காமல் போயிருந்தால் கண்டிப்பாக அடிபட்டு மருத்துவமனைக்குச் சென்றிருப்பேன். அந்த விஷயத்தை நீங்கள் கவனித்துக் கேட்பதுதான் எனக்கும் தர்மாவுக்கும் கிடைத்த வெற்றி.