

'அபூர்வ சகோதரர்கள்' ஆரம்பித்த விதம் குறித்தும், அப்பு கதாபாத்திரம் குறித்து கமல் நேரலையில் பல விஷயங்களைப் பேசியுள்ளார்.
சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் கமல், ஜெய்சங்கர், நாகேஷ், கெளதமி, ரூபிணி, மனோரமா, ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் 1989-ம் ஆண்டு வெளியான படம் 'அபூர்வ சகோதரர்கள்'. இந்தப் படத்துக்கு பஞ்சு அருணாச்சலம் கதையும், கமல்ஹாசன் திரைக்கதையும் அமைத்திருந்தனர்.
இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் கமல் எப்படி குள்ளமாக நடித்தார் என்பது இப்போது வரை பலருடைய பேச்சாக இருக்கிறது. ஏனென்றால், கிராபிக்ஸ் உள்ளிட்டவை பெரிதாக இல்லாத 1989-ம் ஆண்டிலேயே கமல் குள்ளமாக நடித்துவிட்டார். இது தொடர்பாக பலரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராமிடம் கேட்ட போது, அவரும் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
சமீபத்தில் நடைபெற்ற கமல் - விஜய் சேதுபதி நேரலையில் 'அபூர்வ சகோதர்கள்' ஆரம்பித்த பின்னணியை கமல் தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதி:
விஜய் சேதுபதி: 'அபூர்வ சகோதரர்கள் படம் எப்படி ஆரம்பித்தது. அப்பு கதாபாத்திரம் எப்படித் தோன்றியது?
கமல்: 'சார்லி சாப்ளின்' ஒரு படத்தில் கால் சுருங்குவது போல ஒரே ஒரு ஷாட்டில் செய்திருப்பார். அது எப்படி என்பது பார்த்ததும் புரிந்தது. அதிலிருந்து அப்படியே அடுத்தடுத்து யோசிக்க ஆரம்பித்தேன். முதலில் பாலச்சந்தரிடம் தான் இதைப் பற்றி சொன்னேன். அதற்கு அவர் 'பைத்தியமா உனக்கு, ஒரு படம் பூரா அப்படி நடிக்கனுமா, இருக்கற தொல்லை போதாதா, ஏண்டா இவன் படுத்தறான்' என்று திட்டினார்.
அந்த சமயத்தில் எனக்கு ஏதோ அடிப்பட்டிருந்ததால் அவர் வேண்டாம் என்றார். உனக்கு வேண்டுமென்றால் அதற்காக ஒரு காட்சி வைக்கிறேன் என்று புன்னகை மன்னன் படத்தில் சாப்ளின் செல்லப்பா கதாபாத்திரம் அப்படிக் குள்ளமாவது போல காட்சி வைத்தார். அதோடு போதும் என்று அவர் நினைத்தார். எனக்கு அது ஒத்திகையாக இருந்தது. அந்த குள்ளமான கதாபாத்திரம் மட்டும் தான் என் மனதில் இருந்தது.
அனந்து, சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் என சேர்ந்து நாங்கள் ஒரு கதையை யோசித்து பத்து நாட்கள் படப்பிடிப்பு முடித்தோம். எனக்கு எடுத்தவரைப் போட்டுக் காட்டினார்கள். எடிட்டர் லெனின் உடன் இருந்தார். மூன்று காட்சிகள் ஐநூறு அடி வந்தது. இன்னும் 60 காட்சிகள் என்றால் எவ்வளவு பெரிய படத்தை எடுப்பீர்கள்? எனக்கு இந்தப் படம் பார்த்து தாக்கமே இல்லையே என்றேன்.
குள்ளன் கதாபாத்திரம் எடுப்பது கடினம் என்பதால் அந்தக் காட்சிகளைக் குறைவாக வைத்திருக்கிறோம் என்றார். அதில் எனக்கு மாற்றுக் கருத்து இருந்தது. தொடர்ந்து இது பற்றிப் பேசிக் கொண்டே இருந்தோம். பேசியதையே பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது எனக்குத் தெரிந்தது. சரி சகலகலா வல்லவன் படத்தின் கதாசிரியரை அழைத்து வருகிறேன். அவரிடம் இதைக் காட்டுகிறேன். அவரது விமர்சனத்தையாவது கேட்டுக் கொள்வோம் என்று சொல்லி பஞ்ச அருணாசலம் அவர்களிடம் எடுத்த வீடியோவைப் போட்டுக் காட்டினேன்.
அவர், 'டேய், கமல் என்னப்பா இது' என்று ஆச்சரியப்பட்டார். சரிண்ணே கதை கேளுங்கள் என்றேன். அதற்கு அவர் 'அவன் தான்பா ஹீரோ. குள்ளன் தான் ஹீரோ. அவனை விட்டுட்டு என்ன படம் எடுக்கறீங்க. நான் படம் பாத்தா இவனைதான் பாப்பேன்.' என்று சொன்னார்.
அது எப்படி என்று கேட்டால், 'என்ன வேணாலும் பண்ணுய்யா. குள்ளமாவே நடிச்சா கோவிப்பாங்க. அவனுக்கு ஒரு தம்பி இருந்தான்னு வை. யாதோன் கி பாராத் மாதிரி அவன் அப்பாவை 4 பேர் சின்னபின்னமா கொன்னுடறாங்க. பிள்ளைகள் பிரிஞ்சிருது. திரும்ப கூடி பழிவாங்கனும். அவ்ளோதான. இதுக்கு மேல வெச்சிக்குறாத. இவன் தான் ஹீரோ' என்றார் அப்படியே பேச்சுவாக்கில். சரி அதை திரைக்கதையாக எழுதிக் கொண்டு வந்து சந்திக்கிறேன் என்று சொன்னேன்.
எது சாத்தியம், எது சாத்தியமல்ல என்பது பற்றி யோசிக்காமல் திரைக்கதை எழுதினோம். ஆனால் எனக்கு அந்த குள்ளமான கதாபாத்திரத்தில் தோன்ற மூன்று வழி தான் தெரியும். அதை யாரிடமாவது சொன்னால் கமலே சந்தேகமாக இருக்கிறார் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள் என்பதால் சொல்லவில்லை. ஏற்கனவே ஒரு முறை புதிதாகத் தொடங்கிய படம். வேண்டாம் என்று நினைத்து, எனக்கு எல்லாம் என் மனதில் இருக்கிறது என்று பொய் சொல்லிவிட்டேன்.
முதல் ஒரு வாரம் எனக்குத் தூக்கமே கிடையாது. எந்த காட்சியை எப்படி நடிப்பது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் நடித்ததைப் பார்க்கப் பார்க்கத் தைரியமும் புதிய யோசனைகளும் வர ஆரம்பித்தன.