

ரஜினியின் திருமண மண்டப சர்ச்சை தொடர்பாக உண்மை என்ன என்பது வெளியாகியுள்ளது.
சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார், ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளின் சிறப்பு வார்டுகள் நிரம்பியுள்ளன. இதனால் தனியார் கல்லூரிகளில் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மணப்பாக்கம் வர்த்தக மையத்திலும் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே கரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னையில் மேலும் 50 ஆயிரம் படுக்கைகளைத் தயார் செய்ய திருமண மண்டபங்களை ஒப்படைக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்தார். இதனைத் தொடர்ந்து சென்னையிலுள்ள திருமண மண்டபங்களை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டுகளாக மாற்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதனிடையே ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தை கரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தக் கேட்டால், கொடுக்கத் தயாராகவுள்ளதாக ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய போது ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், "ராகவேந்திரா மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 3 மாதங்களுக்கு எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது" என்று தெரிவித்ததாகத் தகவல் வெளியானது.
இதனை வைத்து இணையத்தில் பலரும் ரஜினியை திட்டத் தொடங்கினார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவானது. இது தொடர்பாக ரஜினி தரப்போ, "பராமரிப்புப் பணி என்று எந்தவொரு தகவலையும் சொல்லவில்லை" என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
திருமண மண்டப விவகாரம் தொடர்பாக விசாரித்தபோது, "எப்போதே மண்டபம் அளிக்கத் தயார் என்று கூறிவிட்டோம். இப்போது மாநகராட்சி வேண்டுகோள் விடுத்தால் கொடுக்கத் தயாராகவே உள்ளோம். ரஜினி இப்போது இருக்கும் சூழலைப் பயன்படுத்தி, அவருக்கு எதிராக இந்த மாதிரி தேவையற்ற வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். உதவி என்றால் ரஜினி எப்போதும் செய்யத் தயாராகவே உள்ளார்" என்று ரஜினி தரப்பு தெரிவித்தது.