

உலக நாயகன் என்று கத்துவதில் சந்தோஷம் இல்லை என்று கமல் தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலைப் பேட்டியாகக் கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 2-ம் தேதி நடைபெற்றது.
இந்த நேரலைப் பேட்டியில், தனது பழைய படங்கள் நினைவுகள், அரசியல் வருகை, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் கமல்ஹாசன். அதில் உலக நாயகன் என்று கத்துவதில் சந்தோஷம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
அந்தப் பகுதி:
விஜய் சேதுபதி: திரையுலகில் நடிகர், இயக்குநர், காட்சி உருவாக்கம் என எது உங்களை ஊக்குவிக்கிறது?
கமல்: அவை அடக்கம் என நினைத்துவிட வேண்டாம். சமைக்கும்போது சாப்பிட்டுவிட வேண்டும் எனத் தோன்றும் தெரியுமா? அதேபோல் மக்களுடன் அமர்ந்து முதல் முறை பார்க்கும்போது இருக்கும். அதற்காகத்தான் படமே எடுக்கிறேன். சம்பளம் எதற்கு என்றால் அடுத்த படம் எடுப்பதற்கு. இருபுறம் பார்த்துக் கொண்டு படம் பார்க்கும்போது கிடைக்கும் சந்தோஷம் இயக்கத்திலோ, நடிப்பிலோ, உலக நாயகன் என்று கத்துவதில் எல்லாம் கிடையாது. நாம் சொன்னது எல்லாம் மக்களிடையே போய்ச் சேருகிறதே என்ற சந்தோஷம், காதலில் மட்டும்தான் வரும்.