

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக சாதித்த சென்னைப் பெண்கள் அரிதினும் அரிது. 1990களில் தமிழ் சினிமாவில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட கதாநாயகியரை விரல் விட்டு எண்ணிவிடலாம். குறிப்பாக 90களின் கடைசி ஆண்டுகளிலும் புத்தாயிரத்தின் தொடக்க ஆண்டுகளிலும் தமிழ்ப் பெண்கள் யாருமே நாயகியராக இல்லை. அந்த நிலையில் 2002-ல் வெளியான ‘மெளனம் பேசியதே’ படத்தின் மூலம் மெளனப் புயலாக நுழைந்தார் சென்னையில் பிறந்து வளர்ந்து மிஸ் சென்னை பட்டமும் வென்றவரான த்ரிஷா.
இன்று 37-ம் பிறந்தநாளைக் கொண்டாடும் த்ரிஷா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக 15 ஆண்டுகளைக் கடந்துவிட்டார். மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ உட்பட கையில் கணிசமான திரைப்படங்களுடன் இன்றும் முன்னணிக் கதாநாயகியாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.
அழகான சென்னைப் பெண்
மாடலிங் துறையிலிருந்து பல விளம்பரங்களில் நடித்துக்கொண்டிருந்த த்ரிஷா இயக்குநர் பிரியதர்ஷனின் ’லேசா லேசா’ படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், அமீரின் ‘மெளனம் பேசியதே’ முதலில் வெளியானது. அந்தப் படம் முழுக்க (பாடல்கள் உட்பட ) சுடிதார் உடையில் வந்து நம் சென்னையில் பேருந்துகளிலும் டூவீலர்களிலும் நம்மைக் கடந்து செல்லும் அழகான கல்லூரிப் பெண்களைப் போல் இருந்தார். இதனால் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார்.
அடுத்தடுத்து ‘சாமி’, ‘வர்ஷம்’ (தெலுங்கு), ‘கில்லி’ ஆகிய படங்களின் மூலம் நட்சத்திர அந்தஸ்தைப் பிடித்தார். அதையடுத்து இத்தனை ஆண்டுகளில் தமிழிலும் தெலுங்கிலும் அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துவிட்டார். இந்தி (’கட்டா மீட்டா’), கன்னடம் (’பவர்’), மலையாளம் (’ஹே ஜூட்’) மொழிகளிலும் தலா ஒரு படத்தில் நடித்துவிட்டார்.
ஜெசி, ஜானு இவர்களைத் தாண்டி
2010-ல் வெளியான இயக்குநர் கெளதம் மேனனின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ த்ரிஷாவின் திரைவாழ்வில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்தின் ‘ஜெசி’ கதாபாத்திரம் கார்த்திக்கால் மட்டுமல்லாமல் ரசிகர்களாலும் பெரிதும் நேசிக்கப்பட்டது. சேலையிலும் மாடர்ன் உடைகளிலும் த்ரிஷாவின் அழகை மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டிய படமாக அது அமைந்தது. அவருடைய நடிப்புத் திறமையும் நன்கு வெளிப்பட்ட படமாக அது அமைந்தது.
அடுத்ததாக 2018-ல் வெளியான ‘96’ அவருக்கு மிகப் பெரிய பெயரையும் புகழையும் ஈட்டித் தந்தது. அந்தப் படத்தில் ‘ஜானு’வாக தன் நிஜ வயதைவிட சில ஆண்டுகள் அதிக வயதுடைய கதாபாத்திரத்தில் மிக அழகாக நடித்திருந்தார் த்ரிஷா. படம் முழுக்க அந்த மஞ்சள் நிற சுடிதாரில் மட்டுமே தோன்றினாலும் ரசிகர்களால் திரையிலிருந்து கவனத்தைச் சிதறவிட முடியவில்லை. அந்த அளவுக்கு ரசிகர்கள் மனங்களை லயிக்கச் செய்தார். படத்தில் அவருடைய அறிமுகக் காட்சிக்கு ரசிகர்கள் விசிலடித்து கைதட்டினார்கள். தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு மிக அரிதாகக் கிடைக்கும் வரவேற்பு இது. நடிக்க வந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய செல்வாக்குடன் நீடிப்பது மிகப் பெரிய சாதனை.
த்ரிஷா என்றாலே தமிழ் ரசிகர்கள் பலருக்கு இவ்விரண்டு படங்களும்தான் நினைவுக்கு வரும் என்றாலும் அவருக்காகவே பார்க்க வேண்டிய இன்னும் பல படங்கள் உள்ளன. அன்பு அண்ணனுக்கும் காதலனுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் கிராமத்துப் பெண்ணாக ‘உனக்கும் எனக்கும்’, அழகான மருத்துவராக ‘சர்வம்’, தந்தையின் அளவுகடந்த அன்புக்கும் சுயசார்புக்கும் இடையே போராடும் மகளாக ‘அபியும் நானும்’, கோபமும் ஈகோவும் மிக்க நாயகனின் வாழ்வில் அன்பை நிறைக்கும் காதலியாக ‘என்றென்றும் புன்னகை’ தன் தொழில் சார்ந்த பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளாமல் சந்தேகப்படும் காதலனிடமிருந்து விடுபட்டுச் செல்லும் நடிகையாக ‘மன்மதன் அம்பு’, விவாகரத்தான பெண்ணாக ஒரு குழந்தைக்குத் தாயாக அழகான நாட்டிய மங்கையாக ’என்னை அறிந்தால்’ என த்ரிஷாவின் அழகையும் நடிப்பையும் திகட்டத் திகட்ட ரசிப்பதற்கான படங்கள் கணிசமானவை. மொழி எல்லைகளைக் கடக்க முடிந்தவர்கள் தெலுங்கில் ‘ஆடவாரி மாடலகு அர்த்தாலே வெறுலே’ (தெலுங்கு), ‘பாடிகார்ட்’ (தெலுங்கு), ‘ஹே ஜூட்’ படங்களைப் பார்க்க வேண்டும்.
தன்னம்பிக்கை முன்மாதிரி
திரைப்படங்களுக்குள் அழகு, நடிப்பு, நடனம், கச்சிதமான உடலமைப்பைத் தக்க வைத்திருப்பது என அனைத்திலும் குறை வைக்காமல் இருப்பதே அவருடைய வெற்றிக்குக் காரணம் என்று தோன்றுகிறது. அவருடைய புன்னகை தவழும் முகம் எப்போதும் பார்ப்பவர்களை வசீகரிக்கக் கூடியது. மனதுக்குப் புத்துணர்வு அளிக்கக்கூடியது. இதையே அவருடைய தனிச் சிறப்பு என்று சொல்ல முடியும்.
ஆனால், திரைக்கு வெளியே ஒரு நடிகையாக அவருடைய தனித்தன்மைகள் ஏராளம். இத்தனை ஆண்டுகளில் அவரையோ எத்தனையோ சர்ச்சைகளில் சிக்க வைத்து அவருடைய திரைப் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. அத்தனை சதிகளையும் தன்னம்பிக்கையாலும் தளராத உழைப்பாலும் கடந்து வந்தார். அந்த வகையில் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அண்ணி, அக்கா, குடும்பத் தலைவி வேடங்களுக்கு மாறிவிட வேண்டிய சூழலில் இன்றும் முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்கள் படங்களில் நாயகியாக நடித்துவருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமா நடிகைகளைப் பாவித்த விதத்தை மாற்றி அமைத்தது த்ரிஷாவின் சாதனைதான்
ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள ’ராங்கி’ மோகன்லாலுடன் ஜீத்து ஜோசப் இயக்கும் ‘ராம்’ (மலையாளம்), மணிரத்னம் இயக்கும் வரலாற்றுப் புனைவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் த்ரிஷாவுக்கு முந்தைய ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் வெகு சிறப்பாக அமைய அவருடைய பிறந்த நாளில் மனதார வாழ்த்துவோம்.