

சென்னையில் மக்களுக்கு தமிழ் மறந்து போய்விட்டது என்று கமல் வேதனையுடன் குறிப்பிட்டார்.
கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலைப் பேட்டியாகக் கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று (மே 2) நண்பகல் 12 மணியளவில் தொடங்கி 1:30 மணி வரை நடைபெற்றது.
இந்த நேரலைப் பேட்டியில், 'தேவர் மகன்' குறித்து விஜய் சேதுபதி சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு கமலும் பதிலளித்தார். அந்தப் பகுதி:
விஜய் சேதுபதி: 'தேவர் மகன்' படத்தில் 2-3 வசனங்கள் ரொம்பவே பிடித்திருந்தது சார். குறிப்பாக நாசர் சார் சிவாஜி சாரை "ஐயா... ஐயா.... யோவ்..." என்று சொல்வார்.
கமல்: நான் இப்போது கமல்ஹாசனுக்கு சபாஷ் சொல்வதை விட, அதை ரசித்தவருக்கு சபாஷ் சொல்லணும். இதுவா புரியலனு சொன்னாங்க. ’விருமாண்டி’ பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் வெட்டவேணாம் அவர்களை. இப்போது உங்களுக்கு புரிந்திருக்கிறது. ஆனால், அதை எழுதும் போது எவ்வளவு சந்தோஷப்பட்டு எழுதியிருப்பேன். பொன்னாடைகள், மாலைகள் எல்லாம் விட பெரிய விஷயம். இத்தனை ஆண்டுகள் கழித்து நீங்கள் சொல்வது தான்.
விஜய் சேதுபதி: ஏன் அந்தக் காட்சியில் அவ்வளவு வசனம் போதும் என நினைத்தீர்கள்?
கமல்: உங்களுக்கு ஏன் சுளீர்னு பட்டது தெரியுமா. சென்னையில் இருப்பவர்களுக்கு அது புரியாது. அதிலிருக்கும் அவமானமே புரியாது. சென்னையில் டக்கென்று ஒருமையில் பேசிவிடுவார்கள். "என்ன படம் நடிச்சுகினு இருக்கிற நீ" என்பார்கள். ஆனால், நீங்கள் ஊருக்குப் போனீர்கள் என்றால், உங்களை யாரும் ஒருமையில் பேசமாட்டார்கள். சார் சொல்கிறார்களோ இல்லயோ.. நீ சொல்லவே மாட்டார்கள். சென்னையில் பல்வேறு மொழி மக்கள் கலந்திருப்பதால் தமிழ் மறந்துபோய்விட்டது. அதனால் தமிழ் கலாச்சாரம் என்ன, எப்படியிருக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டார்கள். அதனால் எங்கப்பா சென்னைக்கு வரவே மாட்டேன் என்றார். அனைவரும் என்னை ஒருமையில் பேசுகிறார்கள் என்பார். நானே ஒரு சின்ன பையனைப் பார்த்து அப்படி பேச மாட்டேன் என்பார்.