

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு பிரச்சினை முற்று பெற்றுவிட்டதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருக்கிறார்.
தாணு தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் தலைப்பு 'கபாலி' என்று ஆகஸ்ட் 17ம் தேதி மாலை இயக்குநர் ரஞ்சித் தனது ட்விட்டர் பகக்த்தில் அறிவித்தார்.
'கபாலி' தலைப்பு அறிவிப்பு குறித்து ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடித் தீர்த்த அதே வேளையில் படத்தின் தலைப்புக்கான பிரச்சினை தொடங்கியது.
ஏற்கனவே 'கபாலி' என்ற பெயரில் புதுமுகங்கள் நடித்திருக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று இருக்கிறது. இப்படத்தின் இசையை இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டு இருக்கிறார். இதனால் ரஜினி படத்தின் தலைப்பு சிக்கல் நிலவும் சூழல் நிலவியது.
தற்போது 'கபாலி' தலைப்பு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் தாணு, "தென்னிந்திய பிலிம் சேம்பரில் படத் தலைப்புக்கு என்று ஒரு பிரிவு இருக்கிறது. மூன்று தலைப்புகள் எழுதிக் கொடுத்து, இவை வேறு யாரிடமாவது இருக்கிறதா என்று கேட்டோம். யாரிடமும் இல்லை என தெரிவித்தார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் கேட்டோம், அவர்களும் யாரிடமும் இல்லை என கூறினார்கள்.
அதற்குப் பிறகு தான் முறையாக பதிவு செய்து, அறிவிக்கப்பட்ட தலைப்பு தான் 'கபாலி'. பின்னர், சிவகுமார் என்பவர் வந்து படத்தலைப்பு குறித்து பேசினார். அவர்களிடம் எங்களது தரப்பு நியாயத்தைச் சொன்னோம், பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டார்கள். தலைவர் எங்களது பெயரில் படம் பண்ணுவது சந்தோஷம் என்று போய் விட்டார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.