கட்சி தொடங்கியது அவசரத்தில் கோபத்தில் எடுத்த முடிவல்ல: கமல்

கட்சி தொடங்கியது அவசரத்தில் கோபத்தில் எடுத்த முடிவல்ல: கமல்
Updated on
1 min read

கட்சி தொடங்கியது அவசரத்தில் கோபத்தில் எடுத்த முடிவல்ல என்று கமல் தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலைப் பேட்டியாகக் கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று (மே 2) நண்பகல் 12 மணியளவில் தொடங்கி 1:30 மணி வரை நடைபெற்றது.

இந்த நேரலைப் பேட்டியில், கட்சி ஆரம்பிக்கும் போது விமர்சனங்கள் வந்திருக்குமே ஏன் கோபப்படவில்லை என்ற கேள்வியை விஜய் சேதுபதி, கமலிடம் எழுப்பினார். அதற்கு கமலும் பதிலளித்தார். அந்தப் பகுதி:

விஜய் சேதுபதி: ஆரம்பிக்கும் போது விமர்சனங்கள் வரும் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதற்கும் நிதானத்துடன் கோபப்படலாம் என்று தான் தள்ளிவைத்தீர்களா?

கமல்: கோபமே படவேண்டியதில்லை. நான் எடுத்த முடிவை மாற்றவே முடியாது. அந்தக் காலகட்டத்தில் ஸ்ருதி என் மகள் என்று சொல்வது நான் எடுத்த முடிவு. இவர் என்ன சொல்வார், அவர் என்ன சொல்வார் என்பது அல்ல அது. அந்தச் சமயத்தில் நானும் என் அப்பாவும் கொஞ்சம் மனஸ்தாபத்தில் இருந்தோம். பரமக்குடிக்கு சென்று அவரிடம் பேட்டிக் கேட்டிருக்கிறார்கள்.

"என்னங்க உங்க பையன் சரிகா வயிற்றில் வளரும் குழந்தை என்னது" என்று சொல்லிவிட்டார் என்று கேட்டதற்கு, "அப்படியா சொல்லிட்டாரா. அப்ப அது என் பேத்தி" என்று முடித்துவிட்டார். அவருடைய மகன் நான். முடிவு எடுப்பதற்கு முன் என்ன சொல்வார்கள் என்பதெல்லாம் இரவு-பகலாக யோசித்து தான் எடுத்தேன். அவசரத்தில் கோபத்தில் எடுத்த முடிவல்ல. இதுவும் அப்படித்தான். கண்ணீர் மல்க எடுத்த முடிவு. இதை நான் செய்யவில்லை என்றால் நல்ல மனிதன் அல்ல என்று சொல்லிக் கொண்டு எனக்குள் எடுத்த முடிவுகள். நான் அரசியலுக்கு வந்ததும் அப்படித்தான்.

விஜய் சேதுபதி: நன்றி சார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in