

கட்சிக்கு 'மக்கள் நீதி மய்யம்' பெயர் வைத்தது ஏன் என்ற விஜய் சேதுபதியின் கேள்விக்கு கமல் பதிலளித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலைப் பேட்டியாகக் கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று (மே 2) நண்பகல் 12 மணியளவில் தொடங்கி 1:30 மணி வரை நடைபெற்றது.
இந்த நேரலைப் பேட்டியில், 'மக்கள் நீதி மய்யம்' என்று கட்சிக்குப் பெயரிட்டது ஏன் என்ற கேள்வியை விஜய் சேதுபதி, கமலிடம் எழுப்பினார். அதற்கு கமலும் பதிலளித்தார். அந்தப் பகுதி:
விஜய் சேதுபதி: 'மக்கள் நீதி மய்யம்' பெயர் வைத்தது ஏன் சார்?
கமல்: புயலின் மய்யம், அமைதியான இடம் அது. புயலின் கண் என்பார்கள், அங்கு புயலே இருக்காது. மய்யமாக இருப்பதில் இருக்கக்கூடிய பல பிரச்சினைகள், கிட்டதட்ட துறவு மாதிரி அது. மய்யத்தில் இருந்தால் சுட்டுக் கொன்றுவிடுவார்கள். அதற்கு காந்தி ஒரு உதாரணம். எனக்கு இரண்டுமே வேண்டும். ஆகையால் மய்யம் என்ற வார்த்தை ரொம்பவே பிடிக்கும். ஆங்கில அர்த்தத்திலும் நல்லதொரு அர்த்தம் இருக்கும். மக்கள் நீதி என்பதை மறந்துவிட்டு, இதற்காக என்று ஒரு இனக்குறிப்புகள் இல்லாமல் இருக்கும். மக்கள் என்பது எவ்வளவு பறந்த சொல் அது. கம்யூனிஸம் என்ற சொல்லில் கம்யூன் என்பது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இஸ்லாமிய கம்யூனிட்டி, கிறிஸ்துவ கம்யூனிட்டி எனச் சொல்வார்கள். மக்கள் கேட்டு வருவதும் நீதி தான். அதற்குப் போராடும் ஒரு கட்சியாக இருக்க வேண்டும்.