

'உல்லாசம்' உருவானதன் பின்னணி சுவாரசியங்களை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி தங்களுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ளனர்.
விளம்பரப் படவுலகில் முக்கியமான இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி. சரவணா ஸ்டோர்ஸ் தொடங்கி பல்வேறு முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்கள் அனைத்துமே இவர்களுடைய இயக்கம். வெள்ளித்திரையிலும் 'உல்லாசம்' மற்றும் 'விசில்' ஆகிய படங்களை இயக்கியுள்ளனர்.
தற்போது சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் அருள் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கி வந்தார்கள். ஆனால், கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு எதுவுமே இல்லை என்பதால், தங்களுடன் பழகிய நண்பர்கள், பணிபுரிந்த படங்கள் குறித்த நினைவலைகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதில் 'உல்லாசம்' படம் உருவான விதம் தொடர்பாக சில புகைப்படங்களை வெளியிட்டு, இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி கூறியிருப்பதாவது:
" 'உல்லாசம்' ஒரு புதிய தொடக்கம். நாங்கள் தயாரித்த தொலைக்காட்சித் தொடர்களை விளம்பரப்படுத்திய மும்பை ஏஜென்சி, எங்களை ABCL நிறுவனத்திற்குச் சிபாரிசு செய்தார்கள். அவர்களும் எங்களது பணிகளைப் பார்த்து திருப்தியாகிக் கதை சொல்ல அழைத்தார்கள். நாங்கள் மும்பையில் ஜெயா பச்சனைச்சந்தித்து கதை சொன்னோம்.
கதை அவருக்கு ரொம்பப் பிடித்துப் போக உடன் க்ரீன் சிக்னல் கொடுத்தார். பிறகு மளமளவென படத்தின் பணிகள் தொடங்கின. கதை உருவாக்கத்திலேயே குரு கதாபாத்திரத்திற்கு அஜித்தை நினைத்து வைத்திருந்தோம். அவருக்கு அந்தக் கேரக்டர் ரொம்பப் பிடித்திருந்தது. எப்போதுமே இயக்குநர்கள் மீது முழு நம்பிக்கை வைப்பவர் அவர்.
அதோடு அமித்ஜி மீது உள்ள மிகப் பெரிய மரியாதை உடனடியாகச் சம்மதித்தார். அஜித் போன்ற உயரிய குணங்கள் உள்ள ஒருவரைச் சந்திப்பது மிக அரிது. பண்பு, பணிவு, சினிமாவின் மீதான காதல் எல்லாமே அவரிடம் இருந்தது. அதோடு தன்னம்பிக்கை, பழகும் விதம், சீனியர்களுக்கு தரும் மரியாதை, உடல் வலிகளை மறைத்துக் கொண்டு உழைக்கும் ஆர்வம், வெளியே தெரியாமல் செய்யும் உதவிகள். இன்றைக்கு தமிழகமே 'தல, தல' என்று கொண்டாடுகிறது என்றால் அது சும்மாயில்லை. அவரது உழைப்பு, நல்ல குணம், தன்னம்பிக்கை.
அதுவரை மென்மையான காதலனாக இருந்த அஜித் முதன் முறையாக கோபமான இளம் வயதுடையவராக உருமாறினார். 100% அந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்தார் அஜித். தேவ் கதாபாத்திரத்திற்குப் பல பரிசீலனைகள் இருந்தன. நாங்கள் எங்கள் கல்லூரி ஜூனியரும், நண்பருமான கெனி(விக்ரம்)யைத் தேர்வு செய்தோம். அவருக்கு நடிப்பின் மீது இருந்த அதீத காதலைத் தெரிந்து... (பாலா கூட உல்லாசத்தின் தொடர்ச்சியாகத்தான் அவரை சேதுவிற்குத் தேர்வு செய்தார்)
எஸ்.பி.பி சாரும், ரகுவரன் சாரும் முக்கியப் பாத்திரங்களை ஏற்றார்கள். ஜெயாஜியின் சிபாரிசு ஏற்று ஸ்ரீதேவியின் அக்கா மகளான மகேஸ்வரியை கதாநாயகியாகத் தேர்வு செய்தோம். ரகுவரன் சார் போன்ற திறமையான ஆளுமையைப் பார்ப்பது அபூர்வம். முடிந்தவரை அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்வதற்கு முயற்சி செய்வார். அவரது குரலும், நடிப்பும் யாருக்கும் வராது. அவருக்கு ஈடில்லை.
கார்த்திக் ராஜா மிகத் திறமைசாலி. கணநேரத்தில் டியூன்களை உருவாக்குவதில் வல்லவர். பின்னணி இசையிலும் அப்பாவைப் போலவே ஒரு லாவகம். பாடல் பதிவுக் கூடத்தில் யுவன், பவதாரிணி, பிரேம்ஜி, வெங்கட் பிரபு, பார்த்தி பாஸ்கர், கீபோர்டில் ஹாரிஸ் ஜெயராஜ் என்று ஒரு இளமைப் பட்டாளமே வேலை பார்த்தது. கமல் சார் ஒரு பாடல் பாடினார்"
இவ்வாறு இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி தெரிவித்துள்ளனர்.