

'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்துக்கும் விக்ரமுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை இயக்குநர் ராஜீவ் மேனன் கூறியுள்ளார்.
ராஜீவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி, அஜித், தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ், மணிவண்ணன், ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'. தாணு தயாரித்த இந்தப் படம் 2000-ம் ஆண்டு மே 5-ம் தேதி வெளியானது. வரும் மே 5-ம் தேதியுடன் இந்தப் படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன.
20 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' குறித்த நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் ராஜீவ் மேனன். அதில் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்துக்கும் விக்ரமுக்கும் உள்ள தொடர்பு குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.
விக்ரமுக்கான தொடர்பு குறித்து ராஜீவ் மேனன் கூறியிருப்பதாவது:
"இந்தப் படத்துடன் விக்ரமுக்கு ஒரு தொடர்புள்ளது. அவர் தான் அப்பாஸ் கதாபாத்திரத்துக்குப் பின்னணி பேசினார். அதற்கு முன் அவருடன் நான் விளம்பரங்களில் பணியாற்றியிருந்தேன். அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இத்தனைக்கும் 'பம்பாய்' படத்தில் அவருக்காக நான் பரிந்துரை செய்தேன்.
'மின்சாரக் கனவு' எடுத்துக்கொண்டிருக்கும்போது பிரபுதேவாவுக்காக ஒரு புதிய குரலை தயாரிப்பாளர்கள் கேட்டனர். நான் விக்ரமை பின்னணி பேசச் சொன்னேன். அதன் பிறகு அப்பாஸுக்கும் பின்னணி பேசி உதவினார். விக்ரமும் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் நடித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். மிகப்பெரிய மல்டி ஸ்டாரர் படமாக மாறியிருக்கும்".
இவ்வாறு ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார்.