பழம்பெரும் ஏவிஎம் ஒலி மேலாளர் சம்பத் காலமானார்: கமல் இரங்கல்

பழம்பெரும் ஏவிஎம் ஒலி மேலாளர் சம்பத் காலமானார்: கமல் இரங்கல்
Updated on
1 min read

பழம்பெரும் ஏவிஎம் ஒலி மேலாளர் சம்பத் காலமானார். அவரது குடும்பத்தினருக்கு கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம். இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ஏவிஎம் ஸ்டுடியோஸ் வடபழனியில் உள்ளது. இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் அனைவருக்கும் இந்த ஸ்டுடியோ மிகவும் பரிச்சியம்.

இந்த ஸ்டுடியோவில் உள்ள ஒலிப்பதிவுக் கூடத்தில் 1955-ம் ஆண்டிலிருந்து பணிபுரிந்தவர் சம்பத். பயிற்சி ஊழியராக இணைந்து 1960-ம் ஆண்டு 'பார்த்திபன் கனவு' என்ற படத்தின் மூலம் ஒலிப்பதிவாளர் ஆனார். தொடர்ச்சியாக பல்வேறு படங்களுக்கு ஒலிப்பதிவாளராகப் பணிபுரிந்து புகழ் பெற்றார்.

ஏவிஎம் நிறுவனத்திலேயே 52 ஆண்டுகள் பணிபுரிந்த சம்பத், 2008-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். மூன்று முறை தமிழக அரசின் விருது வென்றவர். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக நேற்று (மே 1) மாலை காலமானார். இவரது மறைவுக்கு ஏவிஎம் நிறுவனம், திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சம்பத் மறைவுக்கு கமல் விடுத்துள்ள இரங்கல் ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

"ஏவிஎம்மின் சம்பத், ஒரு உண்மையான தொழில்நுட்பக் கலைஞர். அவருக்கு என் வணக்கங்கள். என் சிறுவயதிலிருந்து, அவர் (அவரது துறையில்) தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்து வருகிறேன். துறையில் திறன் வளர்ப்பு குறித்து சில வருடங்களுக்கு முன் நாங்கள் பேசினோம். இதுபோன்ற மனிதர்கள் மறைவதில்லை, அவர் கற்ற அறிவை மற்றவர்களுக்கும் மாற்றிவிட்டுப் போகிறார்கள்".

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in