

கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ஒரு குறும்படத்தில் த்ரிஷா நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.
கரோனா அச்சுறுத்தலா வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலுமே எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை. இதனால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளத்தில் கரோனா விழிப்புணர்வு வீடியோக்கள் மட்டும் வெளியிட்டும், பகிர்ந்தும் வருகிறார்கள்.
இதனிடையே சமீபமாக பலரும் வீட்டிற்குள்ளேயே குறும்படம் ஒன்றை உருவாக்கி அதை வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள 'லாக்டவுன்' என்ற குறும்படம் இணையத்தில் வெளியானது. ஆதவ் கண்ணதாசன் அதை இயக்கியிருந்தார்.
தற்போது முன்னணி இயக்குநரான கெளதம் மேனனும் குறும்படம் ஒன்றை இயக்கி வருவது உறுதியாகியுள்ளது. இதில் த்ரிஷா நடித்துள்ளார். கெளதம் மேனன் வீட்டிலேயே இருந்துக் கொண்டு, த்ரிஷாவுக்கு மொபைல் வீடியோ கால் வழியே எப்படி படமாக்க வேண்டும் என்று கெளதம் மேனன் சொல்வதையும், அதற்காக கையில் ஒரு ஐபேன் வைத்துக் கொண்டு இது சரியா என்று கேட்கும் வீடியோவையும் த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
இதன் மூலம் கெளதம் மேனன் இயக்கத்தில் த்ரிஷா நடித்து வருவது உறுதியாகியுள்ளது. இது முழுக்கவே கெளதம் மேனன் சொல்ல சொல்ல, த்ரிஷா அதை படப்பிடிப்பு செய்து அவருக்கு அனுப்பியுள்ளார். இதற்குப் பிறகு அதை எடிட் செய்து, இசைக் கோர்ப்பு செய்து விரைவில் வெளியிடுவார்கள் என்பது தெளிவாகியுள்ளது. இன்னும் இந்தக் குறும்படத்தின் பெயர் என்ன உள்ளிட்ட எந்தவொரு விவரத்தையும் கெளதம் மேனன் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.