

ட்விட்டரில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இருவரும் சாதனை படைக்க போட்டிப் போட்டு ட்வீட்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்திற்கு இன்று (மே 1) பிறந்த நாள். அவர் இன்று தனது 49-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். கரோனா அச்சுறுத்தலால் சில நாட்களுக்கு முன்பு ட்விட்டர் தளத்தில் கூட எந்தவொரு கொண்டாட்டமும் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அதையும் மீறி அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு அஜித் பிறந்தநாளுக்கான விசேஷமான போஸ்டர் வெளியீட்டை #ThalaAJITHBdayGalaCDP என்ற ஹேஷ்டேக்கில் வெளியிட்டனர். இதை பல்வேறு பிரபலங்கள் வெளியிடவே, அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் தொடங்கியது. இந்த ஹேஷ்டேக்கில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான ட்வீட்டைகளை 24 மணி நேரத்தில் வெளியிட்டனர்.
இன்று அஜித் பிறந்தநாளை முன்னிட்டு #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கினார்கள் ரசிகர்கள். இதில் அஜித் குறித்தும், அவரது படங்கள், பேட்டிகள் குறித்துப் பதிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மேலும் இதில் பிறந்த நாள் வாழ்த்தும் கூறி வருகிறார்கள். சில முன்னணி திரையுலக பிரபலங்கள் கூட இந்த ஹேஷ்டேக்கில் தான் அஜித்துக்கு பிறந்தநாள் தெரிவித்தார்கள். இந்த ஹேஷ்டேக்கில் வெளியான ட்வீட்கள் சுமார் 9 மில்லியனை நெருங்குகிறது.
ட்விட்டர் தளத்தில் 24 மணி நேரத்தில் அதிக ட்வீட்கள் வெளியிடப்பட்ட சாதனையை தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் பிறந்த நாள் ஹேஷ்டேக் வைத்துள்ளது. #HappyBirthdayPawanKalyan என்ற ஹேஷ்டேக்கில் சுமார் 10 மில்லியன் ட்வீட்கள், அதாவது 1 கோடிகளைக் கடந்தது சாதனை புரிந்தது. தற்போது இந்தச் சாதனையை முறியடிக்க வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் முயற்சித்து வருகிறார்கள். இன்னும் சில மணி நேரம் பாக்கியிருப்பதால், இந்தச் சாதனையை முறியடித்து விடுவார்கள் எனத் தெரிகிறது.
இதற்குப் போட்டியாக விஜய் ரசிகர்களோ #VijayTheFaceOfKollywood என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். அவர்களும் பவன் கல்யாண் ரசிகர்களின் ஹேஷ்டேக் சாதனையை முறியடிக்க களமிறங்கியுள்ளனர். இதனால் அஜித் - விஜய் ரசிகர்களும் போட்டியிட்டு ட்வீட்களை போட்டிப் போட்டு வெளியிட்டு வருகிறார்கள்.