

மருத்துவமனையில் இருக்கும் போது 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தின் கதையைக் கேட்டு ஒப்பந்தமாகியுள்ளார்.
ராஜீவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி, அஜித், தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ், மணிவண்ணன், ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'. தாணு தயாரித்த இந்தப் படம் 2000-ம் ஆண்டு மே 5-ம் தேதி வெளியானது. வரும் மே 5-ம் தேதியுடன் இந்தப் படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன.
20 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' குறித்த நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் ராஜீவ் மேனன். இதில் அஜித் கதாபாத்திரத்துக்கு முதலில் நடிகர் பிரசாந்திடம் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார் ராஜீவ் மேனன்.
அஜித் கதாபாத்திரம் குறித்து ராஜீவ் மேனன், "மனோகர் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஒரு சில நடிகர்கள் பெயர் பரிசீலனையில் இருந்தது. பிரசாந்தை அணுகினோம். ஆனால் அவர் தனக்கு ஜோடியாக தபு இல்லாமல் ஐஸ்வர்யா ராய் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்.
அஜித்தின் பெயர் உத்தேசிக்கப்பட்டது. அப்போது அவருக்குக் காயம்பட்டு சிகிச்சையில் இருக்கிறார் என்பது தெரியவந்தது. நான் அவரை மருத்துவமனையில் சந்தித்து அவர் படுக்கையில் இருக்கும் போதுதான் கதையைச் சொன்னேன். அவர் நடிக்க ஒப்புக்கொண்டார்" என்று தெரிவித்துள்ளார் ராஜீவ் மேனன்.
மேலும், படத்தின் கதைக்களம் உருவாக்கம் குறித்து ராஜீவ் மேனன் "எனக்கு ஒரு பணக்கார வீட்டுப் பெண்ணைத் தெரியும். அவரைப் பெண் பார்க்க வந்த ஆள் திருமணம் வேண்டாமென்று நிறுத்திவிட்டதால் அந்தப் பெண்ணை பழி சொன்னார்கள். இதனால் அந்தப் பெண் மூன்று வருடங்கள் மன அழுத்தத்தில் இருந்தார். இந்த நிஜ சம்பவத்தை வைத்து தபு கதாபாத்திரத்தை வடிவமைத்தேன்.
கதைப்படி அவர் குடும்பத்துக்கு ராசியில்லாதவர். எழுத்தாளர் சுஜாதா (படத்தின் வசனகர்த்தா), இந்தப் படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போது எனக்கு ஒரு தந்தை போல மாறினார். அவரும் இந்த கதாபாத்திரத்தை வடிவமைக்க உதவினார். பெண் கதாபாத்திரங்கள் மூலம் இரண்டு விதமான கோணங்களைக் காட்டினோம். தபு கதாபாத்திரம் விதிப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ளும், ஐஸ்வர்யா தனக்குப் பிடித்ததைத் தேடுவார்" என்று தெரிவித்துள்ளார் ராஜீவ் மேனன்.