

'கவலை வேண்டாம்' படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகியதைத் தொடர்ந்து, அவருக்கு பதிலாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
'கோ', 'யான்' ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஆர்.எஸ் இன்போடையின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ஜீவா. 'யாமிருக்க பயமே' இயக்குநர் டி.கே இயக்கவிருக்கும் இப்படத்துக்கு 'கவலை வேண்டாம்' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஜீவா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் பங்கேற்ற போட்டோ ஷூட் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. படப்பிடிப்புக்கான தேதிகள் குளறுபடியால் தற்போது கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டார். விரைவில் புதிய நாயகி ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷூக்கு பதிலாக தற்போது நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இது குறித்து இயக்குநர் டி.கே " நான் இயக்குனர் கே வி ஆனந்த் அவர்களிடம் உதவியாளராக பணிபுரியும் போதே ஜீவா சாரும், காஜல் அகர்வாலும் எனக்கு நல்ல பழக்கம். கதை கரு உருவானவுடன் ஜீவா சார் தான் கதாநாயகன் என்று முடிவெடுத்தேன். ஆனால், முழுக் கதையும் தயாராகும் வரை கதாநாயகி தேர்வு குறித்து முடிவு செய்யவில்லை.இந்தப் படத்தின் நாயகி எல்லோருக்கும் பிடிக்கும் வகையில், நான் எதிர்பார்க்கும் நடிப்பை உடல் மொழியாலும், உணர்வாலும் வெளிப்படுத்துபவராக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.
கதாநாயகனுக்கு இணையாக நடிக்க வேண்டிய பல காட்சி அமைப்புகள், மக்களிடையே நன்கு அறிமுகமான ஒரு நாயகிதான் நடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை உருவாக்கியது. கதையைக் கேட்டவுடன் காஜல் அகர்வாலும் உற்சாகமாக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். வெகு விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது' என தெரிவித்திருக்கிறார்.