

'வலிமை' படக்குழுவினரின் அறிவிப்பால், அஜித் ரசிகர்கள் மிகவும் சோகமடைந்துள்ளனர்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் நாளை (மே 1) தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இதனை முன்னிட்டு சில நாட்களாகவே அஜித்தின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை சமூக வலைதளத்தில் முன்னெடுத்துள்ளனர் அஜித் ரசிகர்கள்.
இதனிடையே, தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு என்பதை மட்டுமே படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நாயகியாக ஹியூமா குரோஷி, வில்லன்களில் ஒருவராக கார்த்திகேயா நடிக்கிறார் போன்ற தகவல்கள் வெளியானாலும், படக்குழு எதையுமே உறுதிப்படுத்தவில்லை. இதனிடையே, மே 1-ம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படக்குழுவினர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என அஜித் ரசிகர்கள் எதிர்நோக்கினார்கள்.
ஆனால் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில், அகில உலகமே போராடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்துக்கும் எந்தவிதமான விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரைக் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்தோடு முடிவெடுத்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதுவரை தனித்திருப்போம், நம் நலம் காப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் மிகவும் சோகமடைந்துள்ளனர். மேலும், தொடர்ச்சியாக போனி கபூர் ட்விட்டர் தளத்தில் எந்தவொரு ட்வீட் வெளியிட்டாலும் அதற்குப் பதிலாக 'வலிமை' அப்டேட் என்று அஜித் ரசிகர்கள் கேட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது.