

'வரனே அவஷ்யமுண்டு' படத்தின் சர்ச்சை தொடர்பாக மலையாளத் திரையுலகினருக்கு இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், நடிகர் பிரசன்னாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் 'வரனே அவஷ்யமுண்டு'. பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் படம் சில நாட்களுக்கு முன்பு டிஜிட்டலில் வெளியானது. இதில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டிக் காட்சிப்படுத்தியது படக்குழு. இந்த காமெடிக் காட்சிகளை வைத்து இணையத்தில் தமிழ்ப் பயனர்கள் பலரும் 'வரனே அவஷ்யமுண்டு' படக்குழுவினரைக் கடுமையாகத் திட்டத் தொடங்கினார்கள். துல்கர் சல்மான் இதற்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பதிவில் ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் தனது தரப்பு நியாயத்தை விளக்கி, அதற்கு மன்னிப்பும் கோரியிருந்தார். இதனிடையே அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் காட்சியையே நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
தற்போது 'சுந்தரபாண்டியன்' படத்தின் இயக்குநரான எஸ்.ஆர்.பிரபாகரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"அன்பிற்குரிய துல்கர் சல்மா மற்றும் அனூப் சத்யன்.
உங்களின் சமீபத்திய வெளியீடான 'வரனே அவஷ்யமுண்டு' எனும் மலையாளத் திரைப்படத்தில், நாய்க்கு 'பிரபாகரன்' என்று பெயர் சூட்டி இருப்பதாக வரும் வசனம் பற்றியும் அதன் மூலம் எழுந்த சர்ச்சை பற்றியும், அதற்கு, மன்னிப்பா அல்லது விளக்கமா என்று புரியாத வகையில் நீங்கள் அளித்த பதிவையும் சற்று முன்பே பார்க்கவும் படிக்கவும் நேர்ந்தது. நிற்க.
அதென்ன கேரள தேசத்திலும் மலையாளத் திரைப்படங்களிலும் தமிழர்களையும் தமிழினத்தின் தேசியத் தலைவரையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகிறீர்கள்? யார் சொல்லிக் கொடுத்தது உங்களுக்கு, மலையாளிகளை விட தமிழர்கள் தாழ்ந்தவர்கள் என்று, உங்களின் தாய்மொழி மலையாளத்திற்கும் தாய்மொழி எங்களின் தமிழ்மொழி என்பதை மறந்து விடாதீர்கள்.!
'பிரபாகரன்' என்பது உங்களுக்கு ஒரு சாதாரண பெயர். எங்களுக்கு அதுவே உயிர். இதைச் சொன்னால் உங்களுக்கு நிச்சயம் புரியாது. இனியும் நீங்கள் தமிழர்களையும் தமிழின தலைவரையும் தொடர்ந்து தரம் தாழ்த்தி பேசுவதாகவும் எழுதுவதாகவும் இருந்தால், நாங்களும் "கேரளத்து காந்தி" என்றழைக்கப்பட்ட கே.கேளப்பன் பெயரையும் சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து பெருந்தலைவராக அங்கு அறியப்பட்ட "மொகம்மத் அப்துல் ரஹிமான் சாகிப்" பின் பெயரையும் "வக்கம் மௌலாவி" யின் பெயரையும் எங்களின் படைப்புகளில் நாய்களுக்கும் பன்றிகளுக்கும் பெயராக சூட்ட வேண்டிய சூழல் ஏற்படும்.
யார் இதைச் செய்கிறார்களோ இல்லையோ, நான் நிச்சயம் என் படைப்பில் இதை செய்வேன் என்பதை பணிவோடு கூறிக்கொள்கிறேன். நடிகர் பிரசன்னா, சக நடிகர் என்கிற முறையில் துல்கர்க்கு ஆதரவாகப் பேசுவதை விட்டு விட்டு, பிரபாகரன் யார் என்பதை எடுத்துக் கூறினால் நன்றாக இருக்கும்''.
இவ்வாறு எஸ்.ஆர்.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.