

தமிழில் முன்னனி தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி (டிடி). பவர் பாண்டி, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
ஊரடங்கு காலத்தில் பிரபலங்கள் பலரும் நேரலை, ரசிகர்களுடனான கலந்துரையாடல், வீடியோக்கள் வெளியிடுவது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். நேரலையின் வருமாறு டிடியின் சமூக வலைதள பக்கங்களிலும் ரசிகர்கள் அவ்வப்போது வேண்டுகோள் வைத்து வந்தனர்.
இந்நிலையில் தனக்கு காலில் முறிவு ஏற்பட்டதாலேயே நேரலையில் வரமுடியவில்லை என்று டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிடி கூறியிருப்பதாவது:
கடந்த சில வாரங்கள் இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஊரடங்குக்குப் பிறகு இந்த விபத்து ஏற்பட்டது. என்னுடைய வலது முட்டியை சரி செய்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய இடது முட்டியில் முறிவு ஏற்பட்டது.
கடும் வலி இருந்தது. எழுதுவது, பிடித்த படங்களை ஆன்லைனில் பார்ப்பது, உள்ளிட்ட விஷயங்களில் என்னுடைய மனதை செலுத்த முயற்சி செய்து வந்தேன். இதை இங்கு பதிவிட மெல்ல வலிமை பெற்றேன்.
இது குறித்து சொல்லாமல் இருந்ததற்கு என் மீது அன்பு வைத்திருக்கும் மக்கள் என் மீது கோபம் கொள்வார்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் நான் உங்கள் யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. நிச்சயம் விரைவில் இதிலிருந்து மீண்டு உங்களிடம் வந்து உங்கள் அன்பை பெறுவேன். என்னுடைய மருத்துவர்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள். நேர்லை வருமாறு கேட்டவர்கள் நான் முடியாது என்று சொன்ன காரணத்தை இப்போது புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு டிடி கூறியுள்ளார்.