துல்கர்‌ எப்பொழுதும்‌ தமிழர்‌ உணர்வுகளை மதிப்பவர்: 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குநர்

துல்கர்‌ எப்பொழுதும்‌ தமிழர்‌ உணர்வுகளை மதிப்பவர்: 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குநர்

Published on

துல்கர்‌ எப்பொழுதும்‌ தமிழர்‌ உணர்வுகளை மதிப்பவராகவே நான்‌ அறிவேன் என்று இயக்குநர் தேசிங் பெரியசாமி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் 'வரனே அவஷ்யமுண்டு'. பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் படத்தில் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சில நாட்களுக்கு முன்பு இந்தப் படம் டிஜிட்டலில் வெளியானது.

இதில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டிக் காட்சிப்படுத்தியது படக்குழு. இந்த காமெடிக் காட்சிகள் இப்போது இணையத்தில் சர்ச்சையாகியுள்ளது. பலரும் படக்குழுவினரைத் திட்டிப் பதிவுகளை வெளியிட, துல்கர் சல்மான் மன்னிப்பு கோரினார்.

இதனிடையே, தமிழ்த் திரையுலகினர் சிலர் துல்கர் சல்மானுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது துல்கர் சல்மான் நடித்த தமிழ்ப் படமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"துல்கர்‌ சல்மானை ஐந்து வருடங்களாகத் தெரியும்‌. அனைவரையும்‌ சமமாக மதிக்கும்‌ ஒரு நல்ல மனிதர்‌. தனக்கு மிகவும்‌ பிடித்த ஊர்‌ சென்னைதான்‌ என்று பலமுறை மீடியாக்களில் கூறியிருக்கிறார்‌. நாம்‌ அனைவரும்‌ மதிக்கும்‌ பிரபாகரனை அவமதிக்கும்‌ நோக்கத்துடன்‌ ஒருபோதும்‌ நடந்துகொள்ள மாட்டார்‌. படங்களில்‌ தான்‌ கூறும்‌ வசனங்கள் யார்‌ மனதும்‌ நோகாமல்‌ இருக்குமாறு எப்போதும்‌ தன்னை இயக்கும்‌ இயக்குநர்களிடம் கேட்டுக் கொள்வார்‌. 'சந்திரமுகி' படத்தில்‌ வரும்‌ ஒரு சீரியஸ்‌ வசனம்‌ பின் ‌நாட்களில்‌ நகைச்சுவைக்காகப் பல படங்களில் பயன்படுத்தப்பட்டது.

அதேபோல்‌ ஒரு பழைய மலையாளப் படத்தில்‌ ஒரு நடிகர்‌ சீரியஸாக "பிரபாகரா" என்று கூறியது அங்கே மீம்களில்‌ நகைச்சுவையாக ஹிட்‌ அடித்திருக்கிறது. அந்த நகைச்சுவை மீம்‌ மெட்டீரியலை இந்தப் படத்தில்‌ பயன்படுத்தியுள்ளனர்‌. நிச்சயமாக தமிழினத் தலைவரையோ நம்‌ உணர்வுகளையோ புண்படுத்தும்‌ நோக்கத்தில்‌ வைக்கப்பட்ட காட்சி அல்ல.

எனினும்‌ நம்‌ உணர்வுகளுக்கு மதிப்பளித்து துல்கர்‌ வருத்தம்‌ தெரிவித்துவிட்டார்‌. தவறான புரிதலால்‌ ஏற்பட்ட இந்தக் கசப்பான விஷயத்தைக் கடந்து போவோம்‌. ஒரு நண்பனாக துல்கர்‌ எப்பொழுதும்‌ தமிழர்‌ உணர்வுகளை மதிப்பவராகவே நான்‌ அறிவேன்‌".

இவ்வாறு தேசிங் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in