சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஞ்சலி

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஞ்சலி
Updated on
1 min read

தன்னைப் பற்றி வெளிவந்து கொண்டிருந்த சர்ச்சைகள் அனைத்துக்கும் விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை அஞ்சலி

சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சினை, இயக்குநர் களஞ்சியத்துடன் ஏற்பட்ட பிரச்சினை ஆகியவற்றைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் குடியேறினார் அஞ்சலி. தெலுங்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பிக்க அங்கேயே நடித்துவந்தார். தமிழில் நீண்ட நாட்கள் கழித்து 'சகலகலா வல்லவன்', 'தரமணி', 'இறைவி' உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்திருக்கிறார்.

அமெரிக்காவுக்கு அடிக்கடி செல்கிறார். எஸ்.ஜே.சூர்யா பிறந்த நாள் பார்ட்டியில் ஏற்பட்ட பிரச்சினை என அஞ்சலி மீண்டும் அவர் குறித்த செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

தற்போது தன்னைப் பற்றிய அனைத்து சர்ச்சைகளுக்கும் விளக்கமளித்திருக்கிறார் அஞ்சலி. 'சகலகலா வல்லவன்' படத்தை விளம்பரப்படுத்துவதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அஞ்சலி கூறியது:

"என்னைப் பற்றி நிறைய செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. எந்த செய்தியிலும் உண்மையில்லை, அந்த செய்திகளை எல்லாம் படித்துவிட்டு சிரிக்கிறேன்.

தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறேன். என் குடும்பம் இப்போது அங்கே தான் இருக்கிறது. தமிழ் திரையுலகில் எனக்கு அதிக தோழிகள் இல்லை. என்னுடைய படங்களுக்கு அதிகம் அமெரிக்காவில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதனால் அமெரிக்கா செல்கிறேன். உடனே நான் அடிக்கடி அமெரிக்காவில் யாரையோ பார்க்க செல்கிறேன், அவர் தொழிலதிபர், என் காதலர் என்று எல்லாம் பொய் செய்தியை பரப்புகிறார்கள். அந்த செய்தியை நான் படிக்கும் போது ஹைதராபாத்தில் தான் இருந்தேன்.

சில தினங்களுக்கு முன் சென்னை தனியார் ஓட்டலில் இரவில் நடந்த எஸ்.ஜே.சூர்யா பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்றது உண்மை. கேக் சாப்பிட்டது எல்லாம் உண்மை தான். அந்த ஓட்டலில் என்ன நடந்தது, யார் சண்டை போட்டார்கள் என்பது எனக்கு தெரியாது. அதிலும் என் பெயர் தான் அடிபடுகிறது. அதை படித்தபோது சிரிப்பு தான் வந்தது. நான் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை.

சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சினை, 'ஊர்சுற்றி புராணம்' போன்ற பிரச்சினைகள் பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை." என்று தெரிவித்தார் அஞ்சலி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in