

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமான நாள் முதல் இன்று வரை முன்னணி நட்சத்திரமாகவும் பெரிதும் மதிக்கப்படும் நடிகையாகவும் விளங்கும் சமந்தாவின் பிறந்த நாள் இன்று.
சென்னைப் பெண்
தமிழ் சினிமாவில் 90களில் வெளிமாநில நடிகைகளின் ஆதிக்கம் தொடங்கியது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பெண்கள் முன்னணிக் கதாநாயகிகளாக நீடிப்பது அரிதாக இருந்தது. இந்நிலையில் த்ரிஷாவுக்குப் பிறகு இன்னொரு சென்னைப் பெண்ணாகக் களமிறங்கி சாதித்தவர் சமந்தா. சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்தவரான சமந்தா தன்னைத் தமிழ்ப் பெண் என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார். தொடக்க நாட்கள் முதல் சரளமாகத் தமிழ் பேசி வருகிறார். இதுவே தமிழ் ரசிகர்களுக்கும் அவருக்கும் இடையிலான ஒரு வலுவான பிணைப்பை உருவாக்கிவிட்டது.
இருமொழித் தொடக்கம்
தொடக்கம் முதலே தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் திரைப்படங்கள் அமைவது அரிது. சமந்தா நாயகியாக நடித்த முதல் படம் ‘யே மாயா சேஸவே’. தமிழில் மறக்க முடியாத காதல் படங்களில் ஒன்றாக நிலைபெற்றுவிட்ட இந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’வின் தெலுங்குப் பதிப்பான இது அங்கு மிகப் பெரிய வெற்றிபெற்றது. ஒரே நேரத்தில் இரட்டை மொழிப் படமாக உருவான இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் நாயகியாக நடித்த சமந்தா தமிழிலும் ஒரு சின்ன ஆனால் முக்கியமான வேடத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இதன் மூலம் முதல் படத்திலேயே இரண்டு மாநிலங்களின் ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்தார். அன்றிலிருந்து இன்றுவரை இரண்டு மொழிப் படங்களில் நடித்துவருகிறார். இரண்டு மொழிகளிலும் பேசத் தெரியும் என்பதாலும் இரண்டு மொழி ரசிகர்களையும் ஈர்த்துவிட்டார் என்பதாலும் இன்றுவரை தமிழ் /தெலுங்கு இருமொழிப் படங்கள் என்றால் முதல் சாய்ஸாக இருப்பவர் சமந்தாதான்.
தமிழில் அறிமுக நாயகர்கள்/இயக்குநர்கள் படங்களில் நடித்தவாறே தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் ‘பிருந்தாவனம்’, மகேஷ்பாபுவுடன் ‘தூகுடு’ எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஈகா’ ஆகிய பெரிய படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். ‘ஈகா’ தமிழில் ‘நான் ஈ’ என்று வெளியாக மிகப் பெரிய வெற்றி அடைந்தது. அதே ஆண்டு கெளதம் மேனனின் ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் தன் அசாத்திய நடிப்புத் திறமையை நிரூபித்தார். இந்தப் படம் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியானது.
மாஸ் படங்களும் மாற்றுப் படங்களும்
அதன் பிறகு தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் முன்னணி நட்சத்திரங்களுடன் பெரிய படங்களிலும் கதைக்கு கதாநாயகிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இடைநிலை. சிறு பட்ஜெட் படங்களிலும் மாறி மாறி நடித்துக்கொண்டே நட்சத்திர அந்தஸ்து, நடிப்புத் திறமைக்கான நற்பெயர் என இரண்டையும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். தமிழில் நட்சத்திர ஏணியில் முதன்மை இடத்தில் இருக்கும் விஜய்யுடன் 'கத்தி', 'தெறி', 'மெர்சல்' என மூன்று படங்களில் நடித்துள்ளார். மூன்று மிகப் பெரிய வெற்றிப் படங்கள். சிம்ரன், த்ரிஷா வரிசையில் விஜய்யுடன் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன நடிகையாக விஜய் ரசிகர்களின் அன்பையும் பெற்றுள்ளார். மாஸ் படங்களிலும் அவற்றுக்கு நேரெதிரான மாற்றுப் படங்கள் என இரண்டு தளங்களிலும் அழுத்தமாகத் தடம் பதித்துவருகிறார்.
இவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருக்கும்போதும் கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் ‘நடிகையர் திலகம்’ படத்தில் இரண்டாம் நிலை கதாபாத்திரத்தில் நடித்தார். நல்ல திரைப்படங்கள், கதாபாத்திரங்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவராக இருக்கிறார்.
தடையேற்படுத்தாத மண வாழ்வு
அறிமுகப் படத்தில் தன்னுடன் நடித்த நாக சைதன்யாவைக் காதலித்து வந்த சமந்தா 2017இல் அவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு நடிகைகள் சினிமாவுக்கு தற்காலிகமாகவேனும் முழுக்குப் போடுவார்கள். திருமணத்துக்குப் பிறகு நடிப்பைத் தொடரும் பல கதாநாயகி நடிகைகள் குறிப்பிட்ட வகையிலான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பார்கள், காதல் காட்சிகள், டூயட் பாடல்கள் போன்றவற்றில் அவர்களைப் பார்க்க முடியாது. ஆனால், சமந்தா இந்த எழுதப்படாத விதிகளை உடைத்திருக்கிறார்.
தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் அவருக்கு அசாத்திய துணிச்சலும் சினிமாவைக் கலையாகவும் தொழில்முறை உணர்வுடனும் அணுகும் பாங்கும் அவருக்கு அபாரமாக இருப்பதைக் காண்பித்தது. திருமணமாகாத நடிகைகளே அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்கத் தயங்குவார்கள். அதற்குக் காரணம் நம் சமூகத்தின் போலி மதிப்பீடுகள். ஆனால், அதையெல்லாம் உடைத்தெறிந்து அந்தக் கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருந்தார் சமந்தா.
ஆர்ப்பாட்டமில்லாத சமூகத் தொண்டு
ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் தனிநபராகவும் சமூக அக்கறை மிக்கவராகத் திகழ்கிறார் சமந்தா. பிரத்யுஷா என்ற அரசுசாரா அமைப்பின் மூலம் ஏழைப் பெண்களுக்கும் நோயாளிகளுக்கும் பல உதவிகளைச் செய்துவருகிறார். விளம்பரங்கள் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் வருமானத்தை முழுமையாக இந்த அமைப்புக்குக் கொடுத்துவிடுவதாகத் தகவல்கள் வெளியாகின. சமூகப் பிரச்சினைகளுக்குத் துணிச்சலாகக் குரல் கொடுப்பவராகவும் இருக்கிறார். ஆணாதிக்கம் சார்ந்த நடவடிக்கைகள் பெண்களை இழிவுபடுத்தும் நடவடிக்கைகள் பேச்சுகள் யாரிடமிருந்து வந்தாலும் அவற்றை ட்விட்டரில் துணிச்சலாக விமர்சிக்கிறார்.
சமந்தா தன்னை ஒரு சாமானியப் பெண்ணாகவே அடையாளப்படுத்திக்கொண்டார். அந்த நிலையிலிருந்து இன்று அவர் இருக்கும் நிலையை அடைவதற்கு எவ்வளவு உழைப்பும் விடா முயற்சியும் தேவைப்பட்டிருக்கும் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. சாமானியப் பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பவராகவும் சாதனையாளர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாகவும் திகழும் சமந்தா மேலும் பல சாதனைகளைப் படைக்க மனதார வாழ்த்துவோம்.