

பெண்கள் மீதான குடும்ப வன்முறைகளைக் களைய வரலட்சுமி சரத்குமார் யோசனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் முடிவடையாத காரணத்தால், ஊரடங்கு தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.
இதனால் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதற்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் குரல் கொடுத்து வருகிறார்கள். மேலும், பெண்கள் மீதான வன்முறைகளுக்கும் அரசு தனியாக ஹெல்ப் லைன் எண் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
"பெண்களுக்காக ஒரு முக்கியமான விஷயம். பல பெண்கள் இந்த லாக் டவுனில் குடும்பக் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பெண்கள் தப்பிக்க வழியில்லாமல் வீட்டில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு ஹெல்ப் லைன் இருக்கிறது. அந்த நம்பர் 1-800-102-7282. இந்த நம்பருக்கு அழைத்தீர்கள் என்றால் கண்டிப்பாக உதவி செய்வார்கள். உங்களுக்குத் தெரிந்த அத்தனை பெண்களுக்கும் இந்த எண்ணைக் கொடுங்கள்.
உங்களுக்குத் தெரியாமல் கூட அவர்கள் வீட்டில் நடந்து கொண்டிருக்கலாம். சீக்ரெட்டாக கொடுங்கள், குழந்தைகள் முன் கொடுக்காதீர்கள். அவர்கள் தப்பித்தவறி போய் சொல்லிவிட்டால் அதுவும் பிரச்சினையாகிவிடும். அவர்கள் தனியாக இருக்கும்போது கொடுங்கள். இந்த விஷயம் வயது, செல்வாக்கு, படித்தவர்கள். படிக்காதவர்கள் பார்த்துப் பண்ணக்கூடிய விஷயமல்ல. யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம், எந்தப் பெண்ணுக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். இந்தத் தொலைபேசி எண்ணை அனைவருக்கும் பரப்புங்கள். பாதுகாப்பாக இருங்கள்"
இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் பேசியுள்ளார்.