

கரோனா ஊரடங்கு முடிந்து வெளியே வர என்ன செய்ய வேண்டும் என்பதற்கான காரணத்தை விவேக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கரோனா ஊரடங்கு அமலில் வந்ததிலிருந்தே தொடர்ச்சியாக பல்வேறு இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் கரோனா தொடர்பான விழிப்புணர்வை தங்களுடைய சமூக வலைதளத்தில் ஏற்படுத்தி வருகிறார்கள்.
கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்தே நடிகர் விவேக் அவ்வப்போது விழிப்புணர்வு தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக விவேக் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது:
"முதல் கட்டமாக 21 நாள் ஊரடங்கை கடைப்பிடித்தோம். அதன் தொடர்ச்சியாக 2-ம் கட்ட ஊரடங்கு 19 நாள். மொத்தமாக 40 நாட்களில் 30 நாட்களைத் தாண்டிவிட்டோம். இப்போது 4 நாட்கள் முழுமையான ஊரடங்கில் இருக்கிறோம். சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், சேலம் ஆகியவற்றில் முழுமையான ஊரடங்கு. இது தவிர்த்து மாநகராட்சிகளில் சில பகுதிகளை முழுமையான ஊரடங்காக அறிவித்துள்ளார்கள்.
இது எதனாலே, எதற்கு இந்த ஊரடங்கு தொடர்ச்சியாகப் போய்க் கொண்டே இருக்கிறது என்று யோசித்துப் பார்க்க வேண்டும். என்றைக்கு இந்தக் கரோனாவிலிருந்து விடுதலை என்று அனைவரும் கேட்கிறோம். என்றைக்கு வெளியே வருவோம், என்றைக்கு சகஜமாக இருப்போம் என நினைக்கிறோம். எப்போது தமிழக அரசு மற்றும் இந்திய அரசு சொல்வதைக் கடைப்பிடிக்கிறோமோ அன்றைக்குதான் நம்மால் வெளியே வர முடியும். அதனால்தான் இந்த ஊரடங்கு தொடர்கிறது.
நமக்கு தொற்று எண்ணிக்கை குறைந்து 0 தொற்று என வர வேண்டும். அப்போதுதான் நாம் முழுமையாக வெளியே வந்திருக்கிறோம் என்று அர்த்தம். அப்போதுதான் நாமும் வெளியே வருவதற்கு அரசு உதவி செய்யும்.
முழுமையான ஊரடங்கை கடைப்பிடிக்கத் தவறிய காரணத்தால்தான், இந்த ஊரடங்கு தொடர்கிறது. எங்கு போனாலும் பைக்கில் நிறைய நண்பர்களுடன் பயணிப்பது, பயங்கரக் கூட்டத்தில் போய் காய்கறிகள் வாங்குவது ஆகியவற்றை தினமும் காணொலியில் பார்க்கிறோம். இப்படியிருக்கும் வரைக்கும் நம்மால் ஊரடங்கை நிறுத்தவே முடியாது. நாம் வீட்டிற்குள்ளேயேதான் முடங்கியிருக்க வேண்டியதிருக்கும்.
ஆகவே, நாம் இப்போது ரொம்ப முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். தமிழகத்தைச் சார்ந்த அனைத்து மக்களே, நண்பர்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். முழுமையான ஊரடங்கைப் பின்பற்றி, எப்படியாவது இந்தத் தொற்று குறைந்து, தொற்று நோயாளிகள் 0 என்ற நிலை வரும் போதுதான் வெளியே வர முடியும். அது நமது கையில்தான் இருக்கிறது. இனிமேலாவது விழித்துக் கொண்டு தனிமையில் இருக்கவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும்.
சிங்கப்பூரில் உள்ள ஆய்வின் படி மே மாத இறுதியில் உலகத்துக்கே இதிலிருந்து விடிவு கிடைக்கலாம் என்று சொல்கிறார்கள். அதே போல் நமக்கு சீக்கிரம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. நாம் தமிழக அரசுடன், இந்திய அரசுடன் ஒத்துழைப்போம்".
இவ்வாறு விவேக் தெரிவித்துள்ளார்.