

என் வாழ்க்கையின் மிகப்பெரிய படம் 'பாகுபலி 2' என்று நடிகர் பிரபாஸ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. இதில் கதை முடியாத காரணத்தால், 2-ம் பாகத்தை 'பாகுபலி 2' என்ற பெயரில் உருவாக்கி வெளியிட்டது படக்குழு. இந்தப் படம் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி வெளியானது.
இந்திய அளவில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற இமாலய சாதனையை இப்படம் நிகழ்த்தியது. மேலும், பல்வேறு இந்திப் படங்களின் வசூல் சாதனை அனைத்தையும் முறியடித்தது. இன்று (ஏப்ரல் 28) 'பாகுபலி 2' வெளியான நாள் என்பதால் நாயகன் பிரபாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"'பாகுபலி 2' நம் இந்திய தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல, என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமும் கூட. மேலும், 'பாகுபலி 2' மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் இத்தருணத்தில், இதை மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றாக மாற்றிய எனது ரசிகர்கள், படக்குழுவினர் மற்றும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆகியோருக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் என் மீது அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும், எனக்கு வாய்ப்பளித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து மகிழ்கிறேன்",
இவ்வாறு பிரபாஸ் தெரிவித்துள்ளார்.