

கரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், பிரபலங்கள் என அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலு கரோனா வைரஸ் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வடிவேலு பேசியுள்ளதாவது:
'என்னவோ நடந்துகொண்டிருக்கிறது. கடவுள் எல்லாரையும் சோதிக்கிறார். இந்த சோதனையில் ஒட்டுமொத்த மனித இனமும் ஒன்று சேர வேண்டும்.
போலீஸ் யாரையும் வேண்டுமென்றே அடிப்பதில்லை. சரியான காரணத்தை சொன்னால் வெளியே விடுகிறார்கள். ‘உங்களை காப்பாற்ற நாங்கள் எல்லாம் சாலையில் உயிரை பணயம் வைத்து நிற்கிறோம்’ என்று நமக்கு உதவி செய்கிறார்கள்.
முன்பெல்லாம் கலவரம் நடந்தால்தான் தடியடி நடத்துவார்கள். ஆனால் இப்போது உயிரை காப்பாற்ற தடியடி நடந்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எச்சரிக்கையுடன் இருங்கள். கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.’
இவ்வாறு வடிவேலு கூறியுள்ளார்.