

'சென்னை 28' படம் பார்த்துவிட்டு இயக்குநர் வெங்கட் பிரபுவைப் பாராட்டி இயக்குநர் பாரதிராஜ ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவர் இயக்குநராக அறிமுகமான படம் 'சென்னை 600028'. எஸ்.பி.சரண் தயாரித்த இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஜெய், சிவா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, சம்பத் ராஜ், இளவரசு, விஜயலட்சுமி என ஒரு பெரிய பட்டாளமே இந்தப் படத்தில் நடித்தனர். யுவன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்த இந்தப் படத்துக்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்தப் படம் வெளியாகி இன்றுடன் (ஏப்ரல் 27) 13 ஆண்டுகள் முடிந்துள்ளன. இதனை முன்னிட்டு இணையத்தில் பலரும் இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், 'சென்னை 600028' படம் வெளியானபோது அதைப் பார்த்துவிட்டு இயக்குநர் பாரதிராஜா கடிதம் எழுதியதை வெங்கட் பிரபு நினைவு கூர்ந்தார்.
அந்தக் கடிதத்தில் இயக்குநர் பாரதிராஜா கூறியிருந்ததாவது:
"தமிழ் சினிமா என்றுமே புதிய தலைமுறைகளால்தான் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது. பிரபு, பிரேம், யுவன், சரண் போன்ற இளைஞர்களால் அது தற்போது மறுமலர்ச்சி அடைந்திருக்கிறது. 'சென்னை 600028' அதை உறுதி செய்திருக்கிறது. இந்திய மக்களின் தேசிய உணர்வாய் ஆகிவிட்ட கிரிக்கெட் எனும் விளையாட்டினூடே சென்னை நகர நடுத்தர இளைஞர்களின் வாழ்வியலை நட்பு, பாசம், காதல் எனும் உணர்ச்சிகளோடு கலந்து இளமை ததும்பக் கொடுத்திருக்கும் வெங்கட் பிரபுவை முதலில் பாராட்டுகிறேன்.
ஆரம்பம், வளர்ச்சி, முடிவு என்று திரைக்கதை இலக்கணத்தின் எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காமல் சுவராஸ்யம் எனும் மக்களின் ஒரே ரசனைக்கு உட்பட்டு வெளிவந்து வெற்றி பெற்றிருக்கிற எண்ணற்ற திரைப்படங்களின் வரிசையில் இத்திரைப்படத்தின் காட்சிகளை இயல்பாய் அமைத்திருப்பது ரசிக்கத்தக்கதோடு பாராட்டுக்குரிய ஒன்றாகும்.
பத்துக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களைத் திரையில் தோற்றுவித்து ஒவ்வொருவரையும் தனித்தன்மையுடன் காண்பித்து, அவர்களின் செயல்களின் மூலம் குணாதிசயங்களின் மூலம் நம்மை மகிழ்வித்து நெடுநாட்களுக்கு நம் மனதில் நிலைக்கச் செய்துவிட்ட திரைக்கதையாசிரியரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
கதாபாத்திரங்கள் மிகைப்படுத்தப்படாமல் இயல்பாய் பேசுவதும், காட்சிகள் எளிமையாய் இருப்பது, அதற்கு ஒளிப்பதிவும் இசையும் பலம் சேர்த்திருப்பதும் பிரபுவுக்குச் சாதகமான விஷயங்களாக அமைந்திருக்கின்றன.
இளையராஜா, அமரன், பாஸ்கர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோருடன் எழுபதுகளில் சென்னையின் மூலை முடுக்கலிலெல்லாம் சுற்றித்திரிந்த ஞாபகங்களை எங்களுக்குள் துளிர்விட்ட நட்பை அப்போதைய எங்கள் சந்தோஷங்களை இத்திரைப்படம் மீண்டுமொரு முறை எனக்குள் கிளர்ந்தெழச்செய்தது போல் எனது நண்பர்களுக்கும் ஏற்படுத்தியிருக்கும் என்று நம்புகிறேன்.
எங்கள் மடியில் தவழ்ந்த பிள்ளைகள் இன்றைக்கு எங்களுக்கு வாழ்வளித்த இதே திரைத்துறையில் விழுதுகளாய் படர்ந்து வேரூன்றுவதைக் கண்டு மனம் நெகிழ்கிறேன்.
பொத்திவச்ச மல்லிகை மொட்டாய் மறைந்திருந்த இவர்களின் திறமைகள் இன்னும் பல திசைகளில் பரவி பூவாக நறுமணம் வீசி தமிழ் சினிமாவை உலக அரங்கில் கொண்டு சேர்க்கட்டும் என்று வாழ்த்துகிறேன்."
இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.