

அஜித் ஒரு ஜென்டில்மேன் என்று தனது ட்விட்டர் பதிவில் சாந்தனு புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துக்கு மே 1-ம் தேதி பிறந்த நாளாகும். எந்தவொரு நிகழ்ச்சியிலுமே கலந்துகொள்ள மாட்டேன் என்ற கொள்கையுடனே புதுப்படங்களில் ஒப்பந்தமாகிறார் அஜித். மேலும் விமான நிலையம், படப்பிடிப்புத் தளம், அவரது நெருங்கிய நண்பர்களின் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இடங்களில் மட்டுமே அஜித்தைக் காண முடியும். அதை விட்டால் வெள்ளித்திரையில் மட்டுமே.
ஆனாலும், அஜித் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளம் தொடங்கி அனைத்து இடங்களிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். இதற்கான முன்னேற்பாடுகள் இப்போதே ட்விட்டர் தளத்தில் நடைபெற்று வருகின்றன. சில பிரபலங்கள் மூலம் விஷேசமான போஸ்டர்கள் வெளியிடப்படும் என்ற அறிவிப்புகள் ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டன.
அவ்வாறு வெளியிடும் பிரபலங்களுக்கு அஜித்தின் அலுவலகத்திலிருந்து தொலைபேசி வாயிலாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையும் மீறி இன்று (ஏப்ரல் 26) மாலை 5 மணிக்கு அஜித் பிறந்த நாள் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதை பல்வேறு பிரபலங்கள் தங்களுடைய ட்விட்டர் முகப்புப் படமாகவும் மாற்றியுள்ளனர்.
இந்நிலையில், அஜித் அலுவலகத்திலிருந்து வந்த வேண்டுகோள் தொடர்பாக நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தச் சூழலில் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் எனவும் பொது முகப்புப் படங்களை வைக்க வேண்டாம் எனவும் அஜித் விரும்புவதாக அவருடைய ஆபீஸிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அவரது வேண்டுகோளை மதிக்கிறேன். அவர் ஒரு ஜென்டில்மேன். அதேவேளையில் அவரது பிறந்த நாளன்று நாம் தனிப்பட்ட முறையில் கொண்டாடி, அவருக்கு நிச்சயம் நாம் அனைவரும் வாழ்த்துத் தெரிவிப்போம்".
இவ்வாறு சாந்தனு தெரிவித்துள்ளார்.