

'மாஸ்டர்' படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் கைப்பற்றியுள்ள லலித், எனக்குத் திருப்புமுனை அளித்த படம் '96' என்று தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘96’. ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைத்தார். பள்ளிக் கால காதலைப் பற்றிய இந்தப் படம், காதலர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
இதன் வெற்றியைத் தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், தமிழில் வரவேற்பு கிடைத்த அளவுக்கு இதர மொழிகளில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை சன் டிவியிடம் இருக்கிறது.
கரோனா ஊரடங்கு சமயத்தில் இன்று (ஏப்ரல் 26) மாலை இந்தப் படத்தை சன் டிவி ஒளிபரப்பியது. இதனால், ட்விட்டர் தளத்தில் மீண்டும் '96' படம் தொடர்பாக பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கினார்கள்.
இந்தப் படத்தை வெளியிட்ட லலித் குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"என்னுடைய செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோவின் திருப்புமுனை '96'. பிரிவியூக்குப் பிறகு என் அன்புக்குரிய சேது மற்றும் பிரேம் உடனான அந்த 1 மணிநேர உரையாடலை நினைத்துப் பார்க்கிறேன். இந்த அற்புதமான படைப்பைத் தயாரித்து திரையில் கொண்டுவந்ததை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். அனைத்துக்கும் நன்றி விஜய் சேதுபதி".
இவ்வாறு லலித் தெரிவித்துள்ளார்