

ரசிகர்களுடனான நேரலையில் 'ஆயிரத்தில் ஒருவன்' படம் தொடர்பான ரகசியங்களைப் பகிர்ந்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. ரவீந்திரன் தயாரிப்பில் 2010-ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. ஒளிப்பதிவாளராக ராம்ஜி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்திருந்தனர். இந்தப் படம் வசூல் ரீதியில் தோல்வியைத் தழுவினாலும், இப்போது வரை பலரும் கொண்டாடி வருகிறார்கள்.
இந்தப் படத்தின் 2-ம் பாகம் எப்போது உருவாகும் என்ற கேள்வி, கிட்டதட்ட படக்குழுவினர் அனைவரிடமும் கேட்கப்பட்டுவிட்டது. அனைவருமே தயாரிப்பாளர் அமையும் போது நடக்கும் என பதிலளித்துள்ளனர். இதனிடையே, நேற்று (ஏப்ரல் 24) தனது யூ-டியூப் தளத்தில் நேரலையில் ரசிகர்கள் கேட்கும் பாடல்களைப் பாடி, கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்தார் ஜி.வி.பிரகாஷ்.
இதில் ரசிகர்கள் பலரும் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் செல்வராகவனுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்துக் கேட்டனர். அதற்கு ஜி.வி.பிரகாஷ் கூறியிருப்பதாவது:
"இந்த ஸ்டுடியோவில் நானும் செல்வா சாரும் எவ்வளவோ நாட்கள் தூங்காமல் வேலை செய்துள்ளோம். பொங்கல் வெளியீடு என்றவுடன் பயங்கரமாக பணிபுரிந்தோம். அந்தப் படம் வெளியான போது பாராட்டுகள், விருதுகள் கிடைக்கவில்லை என்றாலும் இப்போது அதை ஞாபகம் வைத்துக் கொண்டு கொண்டாடுவது சந்தோஷம். அப்போது இந்த பாராட்டுக்கள் எல்லாம் கிடைத்திருந்தால் பயங்கர எனர்ஜியாக இருந்திருக்கும். உடனே 'ஆயிரத்தில் ஒருவன் 2' செய்திருப்போம்.
அந்தச் சமயத்தில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் முதல் பாதி நீளமான ஒரு வெர்ஷன் இருந்தது. 2-ம் பாதியும் நீளமான ஒரு வெர்ஷன் இருந்தது. கிட்டதட்ட இரண்டும் சேர்ந்து 4 மணி நேர படமாக இருந்தது. அப்போது முதல் பாதி முதல் பாகமாவும், 2-ம் பாதி 2-ம் பாகமாக வெளியிடலாமா என்று செல்வா சார் என்னிடம் பேசினார். இறுதியில் ஒரே பாகமாக வெளியிடலாம் என்று திட்டமிட்டு வெளியிட்டோம்.
அந்தச் சமயத்தில் 2 பாகமாக 'ஆயிரத்தில் ஒருவன்' வெளியிட்டு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்படிச் செய்திருந்தால் அடுத்த பாகமாக 3 மற்றும் 4 உருவாகியிருக்கும். அது ஒரு சீரியஸாக இருந்திருக்கும். செல்வா சாருடன் பணிபுரிந்தது ஒரு அழகான அனுபவம். கார்த்தி சார், பார்த்திபன் சார், ராம்ஜி சார் என அனைவருடைய பணியுமே பிரமாதமாக இருந்தது. அந்தப் படத்தில் நான் ஒரு அங்கமாக இருந்ததில் பெருமையாக நினைக்கிறேன்"
இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.