'வாடிவாசல்' படத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்காக தீம்: ஜி.வி.பிரகாஷ் திட்டம்
சூர்யா நடிக்கவுள்ள 'வாடிவாசல்' படத்தில் காளைகளுக்காக ஒரு தீம் இசை பண்ணவுள்ளதாக ஜி.வி.பிரகாஷ் திட்டமிட்டுள்ளார்
'அசுரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு சூரி நாயகனாக நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இதற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. அனைத்துமே கரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சூரி படத்தை முடித்துவிட்டு, சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இந்தப் படத்தை 'அசுரன்' தயாரிப்பாளர் தாணு தயாரிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இது ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவாகும் 75-வது படமாகும்.
இதன் இசைப் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டார் ஜி.வி.பிரகாஷ். நேற்று (ஏப்ரல் 24) தனது யூ-டியூப் தளத்தில் நேரலையில் ரசிகர்கள் கேட்கும் பாடல்களைப் பாடி, கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்தார் ஜி.வி.பிரகாஷ். அதில் பலரும் 'வாடிவாசல்' அப்டேட் என்று கேட்கவே, அதற்கு பதிலளிக்கும் விதமாக ஜி.வி.பிரகாஷ் கூறியிருப்பதாவது:
"இசையாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இயக்குநர் வெற்றிமாறனும் நானும் பாடல்கள் உள்ள படமாக 3 படங்கள் செய்துள்ளோம். 'விசாரணை' வெறும் பின்னணி இசை மட்டும் பண்ணினேன். ஒவ்வொரு படத்திலுமே வித்தியாசமான இசையை உணர்ந்திருப்பீர்கள்.
'வாடிவாசல்' படத்தின் இசை தென் தமிழக மண் சார்ந்த இசையாகத் தான் இருக்கும். தமிழ் மண்ணின் இசை இருக்கும். அதில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஸ்பெஷலாக ஒரு தீம் இருக்கும். அது வெளியான பிறகு அனைத்து ஜல்லிக்கட்டிலும் அதை உபயோகிப்பார்கள் என நினைக்கிறேன். ஜல்லிக்கட்டுக்காக ஒரு பாடல் பண்ணியிருக்கிறேன். இந்த முறை ஜல்லிக்கட்டு காளைகளுக்காக ஒரு பாடல் அல்லது தீம் பண்ணுவோம் எனப் பேசிக் கொண்டிருக்கிறோம். அது ஸ்பெஷலாக மாஸாக இருக்கும் என நினைக்கிறேன். ஒட்டுமொத்தமாக ஒரு வித்தியாசமான ஆல்பமாக இருக்கும். அந்தப் படத்தின் இசை தொடர்பாக இப்போதே பேசிக் கொண்டிருக்கிறோம்"
இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
