தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் எடுபடாத தர்பார்

தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் எடுபடாத தர்பார்
Updated on
1 min read

தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் 'தர்பார்' படம் பெரிதாக எடுபடவில்லை. 'காஞ்சனா 3' படத்தை விடக் குறைவான புள்ளிகளே கிடைத்தது.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வெளியே வருவதற்கு மட்டுமே தமிழக அரசு அனுமதியளித்ததுள்ளது.

இந்த தருணத்தைப் பயன்படுத்தி தங்களுடைய டி.ஆர்.பியை அதிகரித்துக் கொள்ள, முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே தாங்கள் உரிமைப் பெற்றுள்ள ஹிட் படங்கள் அனைத்தையும் ஒளிபரப்பி வருகிறது.

இதில் சன் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட நாளான ஏப்ரல் 14-ம் தேதி மாலை ரஜினி நடித்த 'தர்பார்' ஒளிபரப்பு செய்யப்பட்டது. முதன் முறையாக ஒளிபரப்பு செய்யப்படுவதால், டி.ஆர்.பி அள்ளும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், 'காஞ்சனா 3' படத்தை விட 'தர்பார்' படத்துக்கு டி.ஆர்.பி குறைவாகவே கிடைத்ததுள்ளது.

'காஞ்சனா 3' திரைப்படம் கடந்தாண்டு தீபாவளிக்கு சன் டிவி ஒளிபரப்பியது. அதனைத் தொடர்ந்து பல முறை ஒளிபரப்பு செய்யப்பட்டாலும், இந்த ஊரடங்கைக் கணக்கில் கொண்டு மீண்டும் ஒளிபரப்பு செய்தது. அதற்கு 15184 டி.ஆர்.பி புள்ளிகள் கிடைத்தது. இதற்குப் பிறகு 'தர்பார்' படத்துக்கு 14593 புள்ளிகள் கிடைத்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'தர்பார்'. இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9-ம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் மக்களிடையே எடுபடவில்லை. அதுவே, டி.ஆர்.பி புள்ளிகளிலும் எதிரொலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சன் டிவியில் எப்போதுமே டி.ஆர்.பி புள்ளிகள் வரிசையில் பல சீரியல்களும் இடம்பெறும். இந்த முறை சீரியல்கள் எதுவுமே ஒளிபரப்பப்படவில்லை என்பதால், அனைத்துமே படங்களின் பெயர்களே இடம்பெற்றுள்ளது.

'காஞ்சனா 3', 'தர்பார்', 'சீமராஜா', 'திமிரு பிடிச்சவன்', 'இருட்டு' ஆகியவை முதல் 5 இடங்களில் இடம்பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in