அரசுடன் சேர்ந்து பணியாற்றவும் தயார்: கமல் வெளிப்படை

அரசுடன் சேர்ந்து பணியாற்றவும் தயார்: கமல் வெளிப்படை
Updated on
1 min read

அரசுடன் சேர்ந்து பணியாற்றவும் தயார் என்று பத்திரிகையாளர்களுடன் உரையாடும் போது கமல் குறிப்பிட்டார்.

கரோனா தொடர்பான விழிப்புணர்வுக்காக, பல்வேறு பிரபலங்கள் விழிப்புணர்வுக்காக வீடியோக்கள், குறும்படங்கள், பாடல்கள் என வெளியிட்டு வருகிறார்கள். தற்போது கரோனா விழிப்புணர்வுக்காகப் பாடல் ஒன்றை எழுதி, இயக்கியுள்ளார் கமல்ஹாசன்.

'அறிவும் அன்பும்' என்று தலைப்பில் உருவாகியுள்ள அந்தப் பாடலை இன்று (ஏப்ரல் 23) காலை யூ-டியூப் தளத்தில் வெளியிட்டார் கமல். இந்தப் பாடலை மாஸ்டர் லிடியன், பாம்பே ஜெயஸ்ரீ, ஆண்ட்ரியா, யுவன், அனிருத், சித்தார்த், முகென், சித் ஸ்ரீராம், ஷங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாசன், தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோர் கமலுடன் இணைந்து பாடியுள்ளனர்.

பாடலை வெளியிட்டவுடன், ஜூம் செயலி மூலம் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடினார் கமல். அப்போது அவர் பேசியதாவது:

"இந்த சூழலில் இந்தப் பாடல் ஒரு சிகிச்சை போல, ஆறுதலைத் தரும் என்று நம்புகிறேன். இந்தப் பாடலுக்காக எல்லா கலைஞர்களும் இணைந்தது, நான் எவ்வளவு பிரம்மாண்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதை எனக்குக் காட்டியது. இந்தப் பாடலை நான் இயக்கியதால் கோவிட்-19 போய்விடாது. வளர்ந்த எல்லாருமே ஒரு காலத்தில் குழந்தையாகத் தாலாட்டு கேட்டவர்கள் தான். எனவே, அப்படி, இந்தப் பாடலை, வீதியில் உணவின்றி இருக்கும் மனிதனுக்காக உருவாக்கினோம். ஒருவேளை இது அவருக்கு நாளைக்கான நம்பிக்கையைத் தரலாம்.

இப்போதுள்ள சூழலில் அரசியல் ரீதியான விமர்சனத்துக்கு நேரமில்லை. நாம் அந்த நிலைக்கு வந்துவிட்டோம். பிறகு நாம் விவாதித்துக் கொள்ளலாம். இப்போதைக்கு நாம் நம்மால் முடிந்த சிறந்த உதவியைச் செய்ய வேண்டும். கரோனா என்பது மேகங்கள் போல உடனே விலகிவிடாது. உலகத்தின் வரலாற்றுக்கு இடப்பட்ட சவால் இது. இதிலிருந்து மனிதர்கள் எழ வேண்டும். ஹிரோஷிமா-நாகசாகியில் அணுகுண்டு போடப்பட்ட பிறகு ஜப்பான் எழுச்சி பெறாது என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் எழுந்து நின்றார்கள். நாமும் எழுவோம்.

நான் அரசுடன் சேர்ந்து பணியாற்றவும் தயார். எனது அணி முடிந்த உதவிகள் அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது. எனது அலுவலகத்தை மருத்துவமனையாக மாற்றத் தயாராக உள்ளேன் என்று ஏற்கனவே கூறிவிட்டேன். ஆனால் அரசிடமிருந்து பதில் வரவில்லை"

இவ்வாறு கமல் பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in