

'மாநாடு' படத்தைத் தொடர்ந்து, மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் சிம்பு.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'மாநாடு'. பாரதிராஜா, எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி அமரன், கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தான் கரோனா அச்சத்தால் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னைக்குத் திரும்பியது படக்குழு.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக நடிக்கும் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. இது தொடர்பாக விசாரித்த போது மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது.
ஆனால், இந்தப் படம் 'மாநாடு' முடிந்து வெளியானவுடன் தான் தொடங்கவுள்ளது. சிம்பு படத்தை இயக்கும் முன்பு, வேறொரு படத்தை இயக்கவுள்ளார் மிஷ்கின். இந்த கரோனா ஊரடங்கில் அந்தப் படத்துக்கான முதற்கட்டப் பணிகளைத் தான் கவனித்து வருகிறார்.
பல வருடங்களாகவே மிஷ்கின் - சிம்பு கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த முறை தான் இந்தக் கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது. மிஷ்கின் சொன்ன கதை மிகவும் பிடித்துவிடவே, உடனே சம்மதம் தெரிவித்துள்ளார் சிம்பு.
இந்தப் புதிய கூட்டணியால், சிம்பு ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.