

‘அருவி’ திரைப்படத்தின் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அதிதி பாலன். பிரபு புருசோத்தமன் இயக்கிய இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அருவி படத்துக்குப் பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அதிதி பாலன் மலையாளத்தில் நிவின் பாலி, மஞ்சு வாரியர் நடிப்பில் லிஜு ஜோசப் இயக்கவுள்ள ‘படவெட்டு’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியிருந்தார்.
இந்நிலையில் அதிதி பாலன் தான் நடித்த ‘ஃப்ளாஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 16எம்எம் மற்றும் 35எம்எம் ஃபிலிம் கேமராக்களால் படமாக்கப்பட்ட இப்பாடலை ‘தாராள பிரபு’ இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார். ‘சூரரைப் போற்று’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்பாடல் உருவான காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அதிதி பாலன் கூறியுள்ளதாவது:
‘ஒரு நாள் கிருஷ்ணா எனக்கு போன் செய்து ஒரு ஃபிலிம் கேமரா டெஸ்ட் ஷூட்டில் பங்கேற்க இயலுமா என்று கேட்டார். கேமரா முன்பு நின்று பல நாட்களாகி விட்டது. அதுவும் ஃபிலிம் கேமராவின் முன்னால் நிற்பது அதுவே முதல்முறை. நிச்சயமாக எனக்கு அந்த பரிசோதனை தேவைப்பட்டது. மிகுந்த ஆர்வத்துடன் உடனடியாக சரி என்று சொன்னேன். இது வெளியாகும் என்று நினைக்கவே இல்லை. ஆனால் இந்த ஊரடங்கு காலத்தில் இதை வெளியிடுவது சரியாக இருக்கும் என்று தோன்றியது.
இது ஒரு வேடிக்கையான ஷூட்டாக மட்டுமே இருக்கப்போகிறது என்று நினைத்தேன். ஆனால் படமாக்கும்போது அவர்கள் பட்ட கஷ்டத்தை பார்த்தேன். ஆனால் அதை விட அவர்களிடம் மகிழ்ச்சி அதிகமாக இருந்தது. இந்த நினைவுகளை வழங்கிய படக்குழுவினருக்கு நன்றி.
இவ்வாறு அதிதி பாலன் கூறியுள்ளார்.