

அஜித்திடம் உதவி கேட்டு தீப்பெட்டி கணேசன் கொடுத்த பேட்டிக்கு, லாரன்ஸ் உதவி செய்துள்ளார். மேலும், அஜித் மேலாளருக்கு அனுப்பிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் நடிகராக வலம் வருபவர் தீப்பெட்டி கணேசன். இவர் ஒரு மாற்றுத்திறனாளி. 'ரேணிகுண்டா', 'பில்லா 2', 'கண்ணே கலைமானே' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது, ஊரடங்கால் கடும் சிரமத்துக்கு ஆளானார். இவருடைய நிலைமையை அறிந்து, நடிகர் சங்கத்தின் விஷால் தரப்பு அவருக்கு அரசி, மளிகைப் பொருட்கள் வழங்கி உதவி செய்தது. இதற்கு நன்றி தெரிவித்து வீடியோவும் வெளியிட்டார் தீப்பெட்டி கணேசன்.
இதனைத் தொடர்ந்து யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார் தீப்பெட்டி கணேசன். அதில் உங்களுடைய நிலை குறித்து அஜித்திடம் எடுத்துரைத்து ஏதேனும் உதவிகள் கேட்டீர்களா என்ற கேள்விக்கு, தீப்பெட்டி கணேசன், "கண்டிப்பாக நிறைய முயற்சிகள் பண்ணினேன். முயற்சியே பண்ணவில்லை என்று சொல்லமாட்டேன். படப்பிடிப்புத் தளத்தில் என்னுடைய நிஜப்பெயரான கார்த்திக் என்று சொல்லி அழைக்கும் ஒரே கடவுள் அஜித் சார் மட்டுமே. எவ்வளவோ படங்கள் நடித்திருந்தாலும் அனைவரும் தீப்பெட்டி கணேசன் என்றுதான் அழைப்பார்கள். அவரிடம் உதவி கேட்க, அவரோடு இருப்பவர்கள் தொடங்கிப் பல பேர் மூலம் ஒரு முறையாவது பார்த்துவிட முடியுமா என முயற்சிகள் செய்தேன். எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை,
என் குழந்தைகளுக்கு ஏதேனும் நல்லது நடக்க வேண்டும் என நினைக்கிறேன் (அழுதுகொண்டே சொல்கிறார்). கண்டிப்பாக இது அஜித் சாரின் காதுக்குப் போகும் என நினைக்கிறேன். என் பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள் என நினைக்கிறேன். என் பிள்ளைகள் எதிர்காலத்துக்கு லாரன்ஸ் சார் தொடங்கி யார் வேண்டுமானாலும் உதவி பண்ணுங்கள். அஜித் சாருக்கு இந்த விஷயம் தெரிந்தாலே, அடுத்த நொடி அழைத்துவிடுவார். நிறையப் பேர் அதைக் கொண்டு போய் சேர்ப்பதில்லை. அதுதான் பிரச்சினை. தயவுசெய்து இந்த விஷயத்தை அஜித் சாரிடம் கொண்டு போய் சேருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ பகுதியை மட்டும் தனியாக கட் பண்ணி, அஜித் ரசிகர்கள் பகிரத் தொடங்கினார்கள்.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து லாரன்ஸ் கூறியிருப்பதாவது:
"ஹாய் பிரதர், இப்போதுதான் இந்த வீடியோவை என் நண்பர் பகிர்ந்தார். இது அஜித் சாருக்குச் சென்றால் நிச்சயமாக அவர் உதவி செய்வார். அவர் மிகவும் நல்ல மனம் கொண்ட நபர். உங்கள் குழந்தைகளின் கல்விக்கு நானும் என்னாலான உதவியைச் செய்கிறேன். உங்கள் தொடர்பு எண்ணைப் பகிருங்கள்".
இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.