கமல்ஹாசன், அனிருத், யுவன், சித் ஸ்ரீராம் இணைந்து பாடும் அறிவும் அன்பும்

கமல்ஹாசன், அனிருத், யுவன், சித் ஸ்ரீராம் இணைந்து பாடும் அறிவும் அன்பும்
Updated on
1 min read

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், 'அறிவும் அன்பும்' என்ற பாடலை எழுதியுள்ளார். இதை அவருடன் இணைந்து, இசையமைப்பாளர்கள் அனிருத், யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.

கரோனா நெருக்கடியால் தேசிய ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்த சூழலில், மக்களுக்கு நம்பிக்கை, நேர்மறை சிந்தனை, அன்பு ஆகியவற்றைப் பற்றிச் சொல்லும் ஒரு பாடலை கமல்ஹாசன் எழுதியுள்ளார்.

'அறிவும் அன்பும்' என்று அழைக்கப்படும் இந்தப் பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, தேவிஸ்ரீ பிரசாத், ஷங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ, சித்தார்த், லிடியன், ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம், முகென் ஆகியோர் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். மகேஷ் நாராயணன் இதற்குப் படத்தொகுப்பு செய்துள்ளார். இதில் பாடுவதற்கு யாரும் சம்பளம் பெறவில்லை.

இந்தப் பாடலை தயாரித்துள்ள திங்க் மியூஸிக் நிறுவனம், "தற்போது நிலவுவது நம்ப முடியாத ஒரு சூழ்நிலை. இந்த புதிய வாழ்க்கை முறை பலரைச் சோதித்து வருகிறது. இதுபோன்ற காலகட்டத்தில், எல்லோரும் உணர்ச்சிகரமாக இருக்கும் வேளையில், அனைவரும் சக மனிதர்களை அன்புடனும், இரக்கத்துடனும் நடத்த வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டியது முக்கியம்.

இந்தப் பாடலை, என்றும் திறமையான கமல்ஹாசன் எழுதியுள்ளார். மற்ற திறமையான கலைஞர்கள் அதன் அழகை உணர்ந்து பாடியுள்ளனர். இது கேட்கும் அனைவரின் இதயத்தையும் தொடும் என்பது உறுதி" என்று தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 23-ம் தேதி அன்று இந்தப் பாடல் திங்க் மியூசிக் யூடியூப் சேனலில் வெளியாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in