Published : 20 Apr 2020 07:55 PM
Last Updated : 20 Apr 2020 07:55 PM

கரோனா அச்சுறுத்தல்: கவுண்டமணி பகிர்ந்த அமெரிக்க பயங்கரம்!

கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக அமெரிக்காவில் உள்ள பயங்கரம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார் நடிகர் கவுண்டமணி

அரசியல், சமூக விமர்சகரும் எழுத்தாளருமான பாமரன் நடிகர் கவுண்டமணியின் நண்பர். இருவரும் ஒரே மாவட்டத்துக்காரர்கள். கரோனா ஊரடங்கை ஒட்டி வீட்டிலிருக்கும் கவுண்டமணியிடம் தொலைபேசியில் உரையாடியது பற்றிய பாமரனின் சுவாரசியப் பதிவு இது...

தானைத் தலைவன் கவுண்டமணியோடு பேசி பல காலமாச்சேன்னு நேத்து போனைப் போட்டேன்.

"பாமரன் எப்படி இருக்கீங்க...? வீட்டோட இருக்கீங்களா” என்றார்.

நானெங்கீங்க.... அடங்காம ஆடிக்கிட்டுதான் இருக்கேன் என்றேன்.

தலைவரே.... வாக்கிங் என்னாவது போறீங்களா…?

“ரெண்டு மூணு நாளைக்கு ஒருதரம் ஆபீஸ் வருவேன்... அப்புறம் ஒரு மணியோட டிரைவர அனுப்பீருவேன்.

சந்துக்கு சந்து பேரிகார்டு போட்டு போலீஸ் நிக்கிறாங்க... போலீஸ் பாத்தா அவுங்ககிட்ட பேசி பதில் சொல்லணும்... எதுக்கு நமக்கு அது....

அப்பறம் கையிலெ கேமரா வெச்சிருக்கான் டப்புன்னு போட்டோ எடுத்து வாட்ஸ் அப்புல போடுவான்... எதுக்கு நம்மளுக்கு வம்பு...."என்று சொல்லி சிரித்தது "தல"...

வீட்டில் அம்மா மரண பயத்தோடு டி.வி பார்ப்பதைச் சொன்னேன்.

“நியூஸ் பாக்க விடாதீங்க... சீரியலக் கீரியலப் பாக்கச் சொல்லுங்க... இல்லன்னா ஆஃப் பண்ணுங்க. இந்த புள்ளி விவரமெல்லாம் யாராவது கேட்டாங்களா? அதெல்லாம் போட்டு ஜனங்கள பயமுறுத்தறாங்க... டி.வி.ல வந்து இந்த நிகழ்ச்சிய எல்லாம் சொல்லாம இருந்தாலே தைரியமா இருப்பாங்க... டி.வி.யப் பாத்துக்கிட்டு திக் திக் திக்குன்னே உட்காந்துகிட்டிருக்கான். ரொம்ப முடியாமப் படுத்திருக்கிறவன் இதப் பாத்தான்னா டப்புன்னு போயிருவான்....

இத எவன் கிட்ட சொல்றதுன்னு தெரியல” என்றார் நம் Counter Mani.

"சோறில்லாம.... யமுனை நதிக்கரையில இந்த அழுகுன வாழைப்பழத்த கொட்டறாங்க.... அதுக்கு அடிச்சுக்கறாங்க பாருங்க.... இதெல்லாம் கொடுமை....

இங்க டி.வி.ல மூஞ்சியக் காட்டுறதுக்காகவே அலையுறாங்க.. கிருமிய ஒழிக்கறதுக்கு மருந்தென்னவோ அதப் பாருங்கடான்னா.....

இங்க அவனவன்..... "

(அதன் பிறகு பேசியதெல்லாம் எழுதினால் ஊர் வம்பை மொத்தமா விலைக்கு வாங்கிய "புகழ்" எனக்கு வந்து சேரும். அப்புறம் நான் தலையிடம் மொத்தமா "வாங்க" வேண்டீ வரும். So…..)

தோழர் சத்யராஜ் பக்கம் பேச்சு திரும்ப "நேத்துகூட அரை மணிநேரம் பேசிக்கிட்டு இருந்தோம்.... ரெண்டு நாளைக்கு ஒருக்காவாவது பேசுவாரு....” என்றவரிடம் உங்க ரெண்டு பேத்தைப் பத்திதான் வாட்ஸ் அப்புல ஒரு வீடியோ வலம் வருது என்றேன்.

"என்ன வீடியோ?"ன்னார்.

இருவரும் செம சரக்கைப் போட்டுவிட்டு அலப்பறை பண்ணும் சினிமா வீடியோதான் அது.

தல: "நான் போயி கக்கூஸ் இருந்துட்டு வந்து படுக்கிறேன்.... கரெக்ட்டா ராத்திரி ஏழு மணிக்கெல்லாம் என்னை எழுப்பி உட்டுரு."

சத்யராஜ் : "எந்திரிச்சு என்ன பண்ணப் போற....?"

தல : "அட இருட்டீரும்… மறுபடியும் நான் படுக்கோணுமில்ல...."

சத்யராஜ் : "அதுக்கு மூடீட்டு தூங்காமயே இருக்கலாமல்ல?"

தல : "அட நான் குப்புறப் படுக்கறது எப்ப...? "

என்று கேட்டபடி மட்டையாகிவிடும் சீன் தான் அது. இதைச் சொன்னதும் அடக்க முடியாமல் சிரித்தார் நம்ம ஆல் இன் ஆல் அழகுராஜா.

சீனாவின் தற்போதைய நிலை....

கரோனோ குறித்த ஊடகங்களின் நிலைப்பாடு.... அமெரிக்க நிலவரம்.... என அனைத்தையும் துல்லியமாய் அடித்து ஆடியவர் அடுத்து சொன்னதுதான் உச்சகட்டம்....

“அது மட்டுமில்ல பாமரன்… அமெரிக்காவுல செப்டம்பர் மாசம்தான் டாக்டருக்குப் படிக்கிறவங்க டிகிரி முடிக்கிறாங்க.... ஆனா இப்பவே முடிச்சுட்டு டாக்டர் பட்டம் குடுத்து எல்லாம் போய் work பண்ணுங்கடான்னுட்டான்..." என்று ஒரு பெரிய குண்டாய் தூக்கிப் போட்டது தலை.

சரி.... இதுதான் சாக்குன்னு சந்தடி சாக்குல சும்மா சிந்து பாடீடுச்சு நம்ம "தலை"....ன்னு நெனச்சுகிட்டு.....

வேறு சில செய்திகளையும் கதைத்த பிறகு "மே மாசம் நிச்சயம் வந்து பாக்குறேன் தலைவரே...." என்றபடி போனை வைத்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து நம்ம தலை அள்ளிவீசிய டுபாக்கூர் சமாச்சாரத்தை கிராஸ் செக் செய்து விடலாம் என்று இணையதளங்களில் நுழைந்து தேடினால் அங்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

தலைவன் சொன்னது 100 க்கு 100 சதவீதம் உண்மை.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க்.... பாஸ்டன்.... மாஸுசூசெட்ஸ்.... போன்ற இடங்களில் நான்காம் ஆண்டு படித்து வந்த மருத்துவ மாணவர்களுக்கு நான்கு மாதங்கள் முன்பாகவே மருத்துவப் பட்டம் கொடுத்து… லைசன்ஸும் கொடுத்து... கரோனோ மீட்புப் பணிகளில் ஈடுபடச் சொல்லி உத்தரவு போட்டு விட்டார்கள் என்கிற செய்தி என்னைப் பார்த்து சிரித்தது. இத்தனைக்கும் அது இந்திய... தமிழக.... ஊடகங்களில் அவ்வளவு கவனத்தைப் பெறாத செய்தி.

"நியூயார்க் டைம்ஸ்"...

"வாஷிங்டன் போஸ்ட்" போன்றவற்றில் வந்திருக்கும் செய்தியை அசால்ட்டாகச் சொல்லிச் சென்ற தலைவனை நினைத்துக் கொஞ்சம் கர்வமாகக் கூட இருந்தது.

இதைத் தலைவனின் வார்த்தைகளிலேயே சொல்வதானால் .....

"அடேய் எனக்கிருக்கிற அறிவுக்கு இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா அமெரிக்காவுல இருக்க வேண்டியவன்டா...

ஏதோ என் கஷ்ட காலம் இந்த வரப் பட்டிக்காட்டுல வந்து பழனியப்பன் சைக்கிள் வீலுக்கு பென்டெடுக்கறேன்..." ஆம்.... நானும் இதை வெறும் நகைச்சுவையாகவே கடந்து போயிருக்கிறேன்....

தலைவனை நேரில் சந்திக்கும் வரை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x