இறுதி மரியாதையைத் தடுப்பது அரக்க குணம்: கமல் காட்டம்

இறுதி மரியாதையைத் தடுப்பது அரக்க குணம்: கமல் காட்டம்
Updated on
1 min read

இறுதி மரியாதையைத் தடுப்பது அரக்க குணம் என்று மருத்துவர் உடலைப் புதைக்க எதிர்ப்பு தெரிவித்ததிற்கு கமல் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் நேற்று (ஏப்ரல் 19) கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைப் பொதுமக்கள் கடுமையாகத் தாக்கினர். பின்னர் மருத்துவரின் உடல் காவல்துறை உதவியுடன் புதைக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரோனா நோய்த்தொற்று எதிர்ப்புப் போரில் முன் படைவரிசை வீரர்கள் எனப் போற்றப்படும் மருத்துவர்கள் மரணத்துக்கு மரியாதை தராமல் இதுபோன்ற விழிப்புணர்வு இல்லாத செயலில் ஈடுபடும் சிலரால் மனிதாபிமானம் சிதைக்கப்படுவதாகத் தலைவர்கள் பலரும், மருத்துவர்கள், மருத்துவ சங்கத்தினரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"கொல்லும் கரோனா கூட சாதி,மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ, நம்மைக் காக்கப் போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து, இறுதி மரியாதையைத் தடுப்பது அரக்க குணம். பாதுகாப்புக் கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள்."

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in